நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலிருந்து வரும் வண்டுகள், பூச்சிகளால் தொல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலிருந்து வரும் வண்டுகள், பூச்சிகளால் தொல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
Updated on
2 min read

திருநெல்வேலி அருகே முத்தூர் பகுதியிலுள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலிருந்து வரும் வண்டுகள், பூச்சிகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிவந்திபட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவந்திபட்டி கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

சிவந்திபட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு அளித்த இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் பொதுமக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கிறார்கள். இதன் அருகில் முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி அமைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறும் வண்டுகள், விஷ பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

வீடுகளில் தண்ணீர், உணவு பொருட்கள், துணிகளில் வண்டுகள், பூச்சிகள் விழுந்துவிடுகின்றன. இரவு நேரங்களில் அதிகளவில் வண்டுகளும், பூச்சிகளும் வருவதால் தூக்கம் கெடுகிறது. எனவே இங்குள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் மா. இரணியன் உள்ளிட்டோர் அளித்த மனு:

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு விதிகளுக்கு மாறாக வேலை செய்யாதவர்களின் பெயர்களில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திரும்ப வசூல் செய்யவும் ஆவன செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடி மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கு.கி. கலைகண்ணன் தலைமையில் அப்பேரவையை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் கிறிஸ்தவ கல்லறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். உச்சிஷ்ட கணபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். கோயிலுக்கு அருகிலுள்ள கல்லறை தோட்டத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அக் கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.வி. மாரியப்பன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு:

மேலப்பாளையத்தில் ஹாமிம்புரம், ஆண்டவர், ஞானியாரப்பா நகர், பங்களாப்ப நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள காலி மனைகளில் கட்டப்படும் வீடுகளுக்கு மின்வாரியம் மின் இணைப்பு வழங்கி வந்தது. தற்போது சில மாதங்களாக புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் மறுத்து வருகிறது. இதனால் இங்கு புதிய வீடுகள் கட்டுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காலதாமதமின்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in