

புதுச்சேரியில் கரோனா தாக்கம் குறைகிறது. குணமடைந்தோர் சதவீதம் தற்போது 89.9 சதவீதமாகியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிக அளவில் இருந்த சூழல் தற்போது மாறி வருகிறது.
தற்போதைய நிலை பற்றிச் சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 820 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 70 பேருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் புதுவையில் 448, காரைக்காலில் 15, ஏனாமில் 12, மாகேயில் 7 பேர் என மொத்தம் 482 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 639 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 31 ஆயிரத்து 627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் சதவீதம் 89.9 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் 2 ஆயிரத்து 59, காரைக்காலில் 129, ஏனாமில் 53, மாஹேவில் 76 பேர் என 2 ஆயிரத்து 317 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 595 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். தொற்றுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.