குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்: 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்

குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்: 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்
Updated on
1 min read

குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமான நிலையில், சிறுவனைத் தேடும் பணி 2-வது நாளாக தேடுதல் தீவிரமாக நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை உள்ளது.

இந்த அணையில் தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த அணைக்குச் சென்று குளிப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக அணைகள், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு போலீஸார் எப்போவாவதுதான் பாதுகாப்பு பணிக்குச் செல்கின்றனர்.

இதனால், தடையை பொருட்படுத்தாமல் குண்டாறு அணையில் பலர் குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் செங்கோட்டை கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூட்டமாக அணைக்குச் சென்று குளித்துள்ளனர். மாலையில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அப்போது, நவாஸ்கான் என்பவரது மகன் ஜிப்ரில் (15) என்பவரை மட்டும் காணவில்லை. இதுபற்றி உடன் சென்ற ஜிப்ரில் நண்பர்களிடம் நவாஸ்கான் கேட்டபோது, நாங்கள் அனைவரும் குண்டாறு அணையில் குளித்துக்கொண்டு இருந்தோம். ஆனால் வீட்டுக்கு திரும்பி வரும்போது ஜிப்ரில் எங்களோடு வரவில்லை என்று கூறினர். இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் குண்டாறு அணை பகுதியில் தேடிய நிலையில் நேற்று இரவு வரை ஜிப்ரில் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி அவரது பெற்றோர்கள் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அரிகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுபற்றி செங்கோட்டை, தென்காசி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி செங்கோட்டை, தென்காசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருநெல்வேலியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் குண்டாறு அணைப் பகுதிக்குச் சென்று தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in