

கோயம்பேடு காய்கறிச் சந்தை மே மாதம் கரோனா தொற்றால் மூடப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குப் பின் இன்று கோயம்பேடு பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 5 மாதம் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்த தங்களுக்கு அரசு வட்டியில்லாக் கடன் அளித்துக் காக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவிய நிலையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மே 24 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அறிவிப்பால் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் திரண்டனர்.
லட்சக்கணக்கானவர்கள் திரண்டதால் கோயம்பேடு மார்க்கெட் தொற்று மையமாக மாறியது.
இதனால் கோயம்பேடு மார்க்கெட் இழுத்துப் பூட்டப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, கனி, பூ, மளிகை மொத்த விற்பனை என நான்கு வகையான வியாபாரங்கள் நடந்து வந்தன. பின்னர் இவை திருமழிசையிலும், மாதவரத்துக்கும் மாற்றப்பட்டன.
அங்கு போதிய இட வசதி இல்லாத நிலையில் வியாபாரிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். பின்னர் வியாபாரிகள் வைத்த கோரிக்கையை அடுத்து அக்டோபர் மாதம் மளிகை மொத்த வியாபாரம், காய்கறி மொத்த வியாபாரம் செய்ய கோயம்பேட்டில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், பழக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. கோயம்பேட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் 870 பெரிய, சிறிய பழக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்த நிலையில், மாதவரத்தில் 2 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர். காய்கறிச் சந்தைக்குத்தான் அதிக அளவில் வியாபாரிகள் குவிய வாய்ப்பு, பழக்கடைக்கு 25%தான் வருவார்கள் எனத் தெரிவித்தும் கடைகள் மூடப்பட்டு 5 மாதமாகத் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது அக்.31 ஆம் தேதி முதல்வர் அறிவித்த ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. அதில் பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 170 மொத்த வியாபாரிகள் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
வாகனங்களில் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் பழங்களை 3-ம் எண் நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும் என்றும், இரவு 7 மணி முதல் 11 மணிக்குள் உள்ளே வந்து இறக்க வேண்டும் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், உரிய இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளைக் கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மளிகை மொத்த வியாபாரம், காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு இடமாற்றம் காரணமாக தங்கள் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 25% வியாபார்ம் கூட நடக்கவில்லை. தற்போது 170 மொத்த வியாபாரக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 700 சிறு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் சிறு கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட தங்கள் வியாபாரம் சீரடைய அரசு தங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
இதேபோன்று காய்கறிக் கடை வியாபாரிகளும் சிறு கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும், வட்டியில்லாக் கடனை அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.