

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தொழில் அதிபரின் மகனை ரூ.2 கோடி கேட்டு கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர் ரவிசுந்தரம்(40). மூலிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக்(19). தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற அபிஷேக் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பலமுறை செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் 'சுவிட்ச் ஆப்' என பதில் வந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரவிசுந்தரம் மனைவியின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "உங்கள் பையன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டார். அதனால் அபிஷேக்கை நாங்கள்தான் கடத்தி வைத்திருக்கிறோம். பெண் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்கவும், அபிஷேக்கை உயிருடன் ஒப்படைக்கவும் ரூ.2 கோடி பணம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார்.
அதன் பின்னரே மகன் கடத்தப்பட்ட விவரம் ரவிசுந்தரத்துக்கு தெரியவந்தது. உடனே அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அபி ஷேக்கை மீட்கவும், கடத்தல்காரர்களை பிடிக்கவும் துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர்கள் சிவபாஸ்கர், சுப்பராயன், ஆய்வாளர்கள் சரவணன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, சந்துரு, ரவிக்குமார், சார்லஸ், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டன. போலீஸார் அறிவுரைப்படி கடத்தல் காரர்களிடம் தொடர்ந்து பேச்சு கொடுத் துக்கொண்டே இருந்தார் ரவிசுந்தரம்.
முதலில் காசிமேடுக்கும், அடுத்து ஆவ டிக்கும் பணத்துடன் வரும்படி கடத்தல் காரர்கள் கூற ரவிசுந்தரமும் பணத்துடன் சென்றார். அப்போது ரவிசுந்தரத்தின் கார் ஓட்டுநராக போலீஸ்காரர் ஒருவரே இருந்தார். ரவிசுந்தரம் சென்ற காரை கைத் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ்காரர்கள் ரகசியமாக கண்காணித்தபடியே இருந் தனர். இவர்கள் சென்ற இடமெல்லாம் மற்றொரு காரும் பின்தொடர்ந்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
கடைசியாக கடத்தல்காரர் கூறியபடி தேனாம்பேட்டை சிக்னல் அருகே காரில் ரவிசுந்தரம் வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருப்பவர்களிடம் பணத்தை கொடுக்கும்படி கடத்தல்காரர் போனில் தெரிவித்தார். ரவிசுந்தரத்தின் போனை ரகசியமாக கேட்டுக்கொண்டிருந்த போலீஸார் அடுத்த விநாடியே பின்னால் வந்த காரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து, அதிலிருந்த சதாம் உசேன்(27), அகமது பதக்(25), ரிஸ்வான் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் விமான நிலையம் அருகே ஒரு காரில் அபி ஷேக்கை கடத்தி வைத்திருப்பது தெரிந்தது. உடனே போலீஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். போலீஸ் வருவதை பார்த்ததும் கடத்தல் கும்பல் காருடன் தப்பிச் சென்றது. போலீஸாரும் அவர்கள் காரை தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
இதனால் பயந்துபோன கடத்தல் கும்பல் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் பாண்ட்ஸ் நிறு வனம் அருகே காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அபிஷேக்கை காரில் விட்டுவிட்டு தப்பி ஓடினர். காரில் இருந்த அபிஷேக்கை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
தப்பி ஓடிய 4 பேரை போலீஸார் விரட்டிச் செல்ல, அதில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த குர்ஷித்(42) என்ற பெண்ணும் செய்யது யாசிக் கனிபா என்பவரும் சிக்கினர். மற்ற 2 பேர் தப்பிவிட்டனர்.
போலீஸாரிடம் பிடிபட்ட சதாம் உசேன், அகமது பதக், ரிஸ்வான், குர்ஷித் ஆகியோ ரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ரவிசுந்தரத்தின் வீட்டில் வளசரவாக்கத்தை சேர்ந்த மதன்(30) என்பவர் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். கைது செய்யப்பட்ட குர்ஷித், கணவரை பிரிந்து வாழும் பெண். இவருக்கும் மதனுக்கும் இடையே தவறான தொடர்பு உள்ளது. இந்நிலையில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட மதன், ரவிசுந்தரத்தின் மகன் அபிஷேக்கை கடத்த திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காக குர்ஷித்தின் மகள் பானு விடம்(19) அபிஷேக்கின் செல்போன் எண்ணை கொடுத்து மிஸ்டுகால் கொடுக்க வைத்திருக்கிறார் மதன். அதைத் தொடர்ந்து பானுவும், அபிஷேக்கும் செல்போனில் ஒரு மாதத்துக்கும் மேலாக பேசியுள்ளனர். ஆனால் இருவரும் நேரில் சந்திக்கவில்லை. கடந்த சனிக்கிழமை அபிஷேக்குக்கு போன் செய்து கோட்டூர்புரம் பாலம் அருகே வருவதாக பானு கூறியிருக்கிறார். உடனே அபிஷேக், நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோட்டூர்புரத்துக்கு சென்றுள்ளார். அங்கு 2 கார்களில் மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் சதாம் உசேன், அகமது பதக், ரிஸ்வான் மற்றும் இருவர் தயாராக இருந்தனர். அபிஷேக் வந்ததும் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்" என்று போலீஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற மதன் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. பானு திருச்சியில் ஒரு வீட்டில் இருப் பதாக கூறப்படுகிறது.