

சின்னவேடம்பட்டி ஏரியில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்வழிப் பாதைகள் மூடப்படுவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வெள்ளக்கிணறு காளிசாமி, ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கணுவாய், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆனைக்கட்டி, மாங்கரை, மூலக்காடு, பொன்னூத்துமலை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, சங்கனூர் ஓடைக்குள் வழிந்தோடி, சிங்காநல்லூர் குளத்தில் கலந்து, நொய்யல் ஆற்றை சென்றடைந்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கணபதி, கவுண்டம்பாளையம், சித்தாபுதூர், பீளமேடு ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகும் சம்பவங்களும் நிகழ்ந்தன.
இதேபோல், கோவை வடக்குப் பகுதி நீராதாரமின்றி வறண்டு காணப்பட்டது. ஆழ்குழாய் கிணறு 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதால், பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டது. இவற்றை கருத்தில்கொண்டு, வறண்டு கிடந்த வடக்குப் பகுதிக்கு நீராதாரத்தை உருவாக்கும் வகையில் சங்கனூர், கணுவாய் அருகே தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து 160 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 1987-ம் ஆண்டு சின்னவேடம்பட்டி ஏரி திட்டம் கொண்டுவரப்பட்டது. 7.5 கி.மீ. நீளம், 5.5 மீ. அகலம், 3 மீ. ஆழத்துடன் இந்த ஏரி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் இந்த ஏரி மழையின்றி வறண்டு காணப்படுகிறது. புதர்கள் மண்டியும், களைகள் படர்ந்தும் கிடக்கிறது. மேலும், கட்டிடக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் நீர்வழிப் பாதைகள் மூடப்பட்டு, நீர்ப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அப்பகுதியில் கழிவுகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், யாரும் அதை கண்டுகொள்வதில்லை.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக கழிவுகளை அகற்றி புதர் மற்றும் களைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையை விவசாயத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.