Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோளத்தை காப்பது எப்படி? - வேளாண் விஞ்ஞானிகள் செயல்திட்ட விளக்கம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம், குண்டடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய வட்டங்களில் மக்காச்சோளப் பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஸ்பொடாப்டரா புருஜிபெர்டா என்று அழைக்கப்படும் மக்காச்சோள படைப்புழு, மக்காச்சோளப் பயிரை அதிகம் தாக்குகிறது.

பொங்கலூர் அருகே செம்மடாம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜாவின் வழிகாட்டுதல்படி, பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி பி.ஜி.கவிதா செயல் விளக்கம் மூலமாக விவசாயிகளுக்கு விளக்கினார்.

கோடை உழவு, விதை நேர்த்தி ஊடுபயிர் மற்றும் விளக்குப்பொறி பயன்படுத்துதல் போன்ற உத்திகளை விவசாயிகள் கையாண்டனர். கடினமான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த முடிவதால், அதிக உற்பத்திச் செலவு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் காரணமாகவும், அதிக விலை கொடுத்து அவற்றை வாங்குவதாலும் மாற்றுவழி கட்டுப்பாட்டு முறைகள் மிகவும் அவசியமாகின்றன.

இதுதொடர்பாக பி.ஜி.கவிதா கூறும்போது, ‘‘ஒரு பெண் அந்துப்பூச்சி, தன் வாழ்நாளில் 20 ஆயிரம் முட்டைகள் இடும். 25 முதல் 30 நாட்கள் வாழ்க்கை சுழற்சி கொண்ட படைப்புழு, ஆறு புழு பருவங்களைக் கொண்டது.ஆரம்ப நிலை புழு பருவங்களை வேப்ப எண்ணெய் கரைசல் கொண்டோ அல்லது சேகரித்து அழிக்கும் முறையிலோ கட்டுப்படுத்திவிட்டால், அவற்றால் ஏற்படும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம்’’ என்றார்.

அதிக தாக்குதல் இருக்கும் நேரங்களில், கோரோஜன் அல்லது டெலிகேட் எனப்படும் மருந்துகளில் ஒன்றை 5 மில்லி அளவில் கை தெளிப்பான் டேங்க் மூலமாக தெளிக்கலாம்.

விதைப்பதற்கு முன் கோடை உழவு, கடைசி உழவின்போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுதல், வரப்பு மற்றும் ஊடுபயிராக பயிர் வகைகளை விதைத்தல், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்கு பொறிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட முறைகளும், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் மெட்டாரைசியம் அல்லது பவேரியாபோன்ற பூஞ்சாணக் கொல்லிகள்பயன்படுத்துதல், வேப்ப எண்ணெய் தெளித்தல், ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் உள்ளிட்டபயிர் பாதுகாப்பு வழிமுறைகளும், செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த செயல் விளக்கத்தின்போது முக்கிய இடுபொருட்களான மெட்டாரைசியம் பவேரியா, டிரைக்கோடெர்மா விரிடி, மக்காச்சோளப் பயிர் நுண்ணூட்ட உரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x