

தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள், டிக்கெட் முன்பதிவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. மக்களின் வசதிக்காக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னை கோயம்பேட்டில் இருந்து 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள், சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் பல்லவன் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஓரிரு நாட்களில் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.