

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம்மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள்கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு அக்டோபர் 31-ம்தேதிவரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட நவம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இந்த ஆணை பொது மக்கள் நலன்,பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள மற்றொரு உத்தரவில், தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சிலகட்டுப்பாடுகள் நவம்பர் 1-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை விதிக்கப்படுகிறது. அதன்படி, பொதுஇடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.