

மதுரையில் உயர் மதிப்பு முத் திரைத் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக அதிக மதிப்புள்ள சொத்துகள் பதிவு செய்வது தாமதமாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் வீடு, மனை அல்லது காலி இடங்களை வாங்குவது, விற்பது மற்றும் வாடகை, குத்தகை ஒப்பந்தங்கள் அனைத்தும் அதன் சொத்து மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட்டு ஆவ ணங்களாகப் பதிவு செய்யப் படுகின்றன.
ரூ.10 முதல் ரூ.25 ஆயிரம் மதிப்பு வரை முத்திரைத் தாள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு உரிமம் பெற்ற முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் அந்தந்த மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து முத்திரைத் தாள்களைப் பெற்று பத்திர எழுத்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் கிடைப்பதில்லை. ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைத் தாள்களின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இந்த மதிப்புடைய முத்திரைத் தாள்கள் கிடைக்காததால் அதிக சொத்து மதிப்புள்ள பத்திரப் பதிவுகள் தாமதமாகின்றன.
இது குறித்து பத்திரப் பதிவு எழுத்தர் ஜெ.செந்தில்வேல் முருகன் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் கிடைப்பதில்லை. இதனால் அதிக மதிப்புடைய சொத்துகளைப் பதிவு செய்வதில் சிரமம் உள்ளது. உயர் மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் கிடைக்காததால் குறைந்த மதிப்பிலான முத்திரைத் தாள்களை வாங்கி அதிகளவு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்க்க `இ-ஸ்டாம்பிங்' முறை அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் முத்திரைத் தாள்களைப் பயன் படுத்தியே பத்திரங்கள் பதிய மக்கள் விரும்புகின்றனர்.
முத்திரைத் தாள்கள் விற்பனையாளர்களிடம் கேட்டால், அரசு கருவூலத்தில் இருந்து உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் தருவதில்லை என்கின்றனர். எனவே, சொத்துப் பதிவு தடையில்லாமல் நடைபெற உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் உட்பட அனைத்து மதிப்புடைய முத்திரைத் தாள்களையும் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.