

தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இன்று முதல் தமிழகப் பகுதிக்கு இயக்கப்படுகிறது. தமிழக பேருந்துகளும் புதுச்சேரிக்கு வரத்தொடங்கியுள்ளன.
கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த மே மாதம் 4-ம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியது. அதைத்தொடர்ந்து, மே 20-ம் தேதி முதல் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதேபோல் மே 21-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லா பிஆர்டிசி பேருந்து இயக்கப்பட்டது.
புதுவையை பொருத்தமட்டில் தனியார் பேருந்துகள் தான் அதிகம். தனியார் பேருந்துகளுக்கு சாலை வரி ரத்து செய்யப்படாததால் அவை இயக்கப்படவில்லை. தற்போது ஆறு மாதங்களுக்கான சாலை வரி தனியார் பேருந்துகளுக்கு ரத்தாகியுள்ளது. இதனால் கடந்த அக்டோபர் 22-ம் தேதி முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 28-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கப்படுகிறது.
அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதிக்கப்படாததால் தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து தமிழகத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
தமிழகத்தில் இருந்து புதுவை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மாநில எல்லையான கோரிமேடு கனகசெட்டிக்குளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் மாநில எல்லைகள் மினி பேருந்து நிலையம் போல காட்சியளித்தது. அங்கு இறங்கும் பயணிகள் நடந்தும், ஆட்டோவிலும் புதுவைக்குள் வந்தனர். பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, புதுச்சேரி-தமிழகப் பகுதிகளில் பேருந்துகளை இயக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
அக்கடிதத்துக்கு நேற்று (அக். 31) தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலிருந்து தமிழகப்பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இன்று (நவ. 1) முதல் இயக்கப்படுகின்றன.
இதனையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், புதுவை வழியாக சென்னை செல்லும் பேருந்துகளும் புதுவை பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்றது. இதேபோல், புதுவையில் இருந்து பேருந்துகளும் தமிழக பகுதிகளுக்கு சென்றன. தற்போது தமிழக பேருந்துகள் வருகையால் பேருந்து நிலையம் முழுமையாக இயங்கியது.