

அமைச்சர் துரைக்கண்ணு அதிமுகவுக்காகவும், மக்களுக்காகவும் மகத்தான பணியாற்றிவர் என, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (அக். 31) சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்நிலையில், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவப் படத்திற்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி (புதுடெல்லி) தளவாய் சுந்தரம் தலைமையில் இன்று (நவ. 1) நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்திப் பேசியதாவது:
"தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
துரைக்கண்ணு, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது, மிகுந்த பற்றும், விசுவாசமும் கொண்டவர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவராகவும், பின்னர் பாபநாசம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராகவும் பணியாற்றி, தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிறப்பான முறையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தார்.
2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், அதிமுகவின் சார்பில், பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது வேளாண்மைத்துறை அமைச்சராக சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி வந்தார்.
வேளாண்மைத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் 5 முறை 'கிரீஸ் கர்மா' போன்ற மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மைத்துறைக்கு பெருமை சேர்த்தவர் ஆவார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பை பெற்றவர். 2011-ம் ஆண்டு இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுவில் உறுப்பினராக என்னோடு பணியாற்றியவர்.
கரோனா காலத்தில், பொதுமக்களுக்காக பல்வேறு நிவாரண உதவிகளையும், பல்வேறு சமூக பணியினையும் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக செயலாற்றி வந்தார். இதன் காரணமாக கரோனா தொற்று ஏற்பட்டதால், துரைக்கண்ணு நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்திவிட்டார்.
சட்டப்பேரவையில் நானும் அவரும் அருகில் அமர்ந்து பணியாற்றினோம். எல்லோரிடமும் அன்போடும் பாசத்தோடும் மனித நேயத்தோடும் பழகிய துரைக்கண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்".
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.