அமைச்சர் துரைக்கண்ணு மறைவு; விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிழப்பு: பி.ஆர்.பாண்டியன் இரங்கல்

பி.ஆர்.பாண்டியன்: கோப்புப்படம்
பி.ஆர்.பாண்டியன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவு விவசாயிகளுக்குப் பேரிழப்பு என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (அக். 31) சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பி.ஆர்.பாண்டியன் இன்று (நவ. 1) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து நேரடியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். அதனடிப்படையில், அவர் தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சராக 2016 இல் பொறுப்பேற்றார்.

சாதாரண ஒரு விவசாயி வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்றது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அவர் எல்லோரிடத்திலும் அன்போடும் பண்போடும் பழகக்கூடிய வாய்ப்பு பெற்றவர். வயதில் குறைந்தவராக இருந்தாலும் அண்ணன் என்று எல்லோரையும் மரியாதையாக அழைக்கக்கூடிய ஒரு பண்பாளர்.

எந்த ஒரு பிரச்சினையை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றாலும் உடனடியாக அது குறித்து உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை குறித்து மீண்டும் எங்களை தொலைபேசியில் அழைத்து அதற்கான பதிலை எங்களுக்குக் கொடுப்பார். அவர் அமைச்சர் என்கிற எந்த ஒரு தற்பெருமைக்கும் இடமளிக்க மாட்டார். இவரது பணி மிக சிறப்பானது.

கரோனா என்கிற கொடும் நோய் தாக்குதலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கடந்த வாரம் 26 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தாரிடமும், வேளாண் துறை அதிகாரிகளிடமும் நலம் விசாரித்து விட்டு மீண்டு வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இந்நிலையில், அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், விவசாயிகள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் விவசாயிகள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன், எனது கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக செலுத்துகிறேன்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in