

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று (அக். 31) இரவு, சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்
வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 31) இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் 1972-ம் ஆண்டு சேர்ந்து, திறம்பட பணியாற்றியவர். கட்சி மீது மிகுந்த பற்றும், அதிமுக மீது உறுதியும் கொண்டவர். அதிமுக அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர்.
எம்ஜிஆர் காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவராக பணியாற்றிவர் என்ற பெருமைக்குரியவர்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்து, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்'
என்ற வள்ளுவரின் கூற்றுப்படி ஆர். துரைக்கண்ணு ஒரு செயலை செய்ய எண்ணி விட்டால், அதைச் செய்து முடிக்கும் மன உறுதி உடையவராக இருந்து, அதில் வெற்றி கண்டவர்.
ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். என்னிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகியவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். மூன்று முறை பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், 15 வருடம் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர் ஆர். துரைகண்ணு.
ஜெயலலிதா, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். துரைக்கண்ணுவை 2016-ம் ஆண்டு வேளாண்மைத் துறை அமைச்சராக நியமனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, எனது அமைச்சரவையிலும் வேளாண்மைத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி மக்கள் நன்மதிப்பை பெற்றவர்.
ஆர். துரைக்கண்ணுவின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், எனக்கும், அதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்
தனது எளிமை, பணிவு, நேர்மை, நிர்வாக திறன் மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு குறித்து வேதனையடைந்தேன். பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேளாண் அமைச்சகத்தை முழு அர்ப்பணிப்புடன் கையாண்ட அவர், தனது வலுவான அடையாளத்தை அத்துறையில் பொறித்தார். அவரது அகால மறைவு, தமிழக மக்களுக்கும் குறிப்பாக, அதிமுக கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.