

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (அக். 31) சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்
தஞ்சை தரணியின் மண்ணின் மைந்தராக சட்டப்பேரவையில் டெல்டா விவசாயிகளின் குரலாக ஓங்கி ஒலித்து தமிழக வேளாண் துறை அமைச்சராக உயர்ந்த துரைக்கண்ணு மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.
பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு, தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
வேளாண்துறை அமைச்சராக, பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினராக, சிறப்பாகவும், எளிமையாகவும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக்கூடியவராக செயல்பட்ட துரைக்கண்ணுவுடைய மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் அதிமுகவுக்கும் பேரிழப்பாகும்.
ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது அமைச்சரவையில் செயல்பட்டவர். தொடர்ந்து முதல்வரோடும் துணை முதல்வரோடும் துணை நின்று அமைச்சரவையில் நம்பிக்கைக்குரியவராக பணியாற்றியவர்.
ஜி.கே. மூப்பனாரின் குடும்பத்தோடு மிகுந்த மரியாதை கலந்த அன்போடு பழகியவர்.
அமைச்சரானாலும் மக்களோடு மக்களாக எளிமையாக பழகியவர் என்று பெயரெடுத்த அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அதிமுகவினருக்கும் தொகுதி மக்களுக்கும் தமாகா சார்பிலே என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிமுக முன்னோடியுமான ஆர். துரைக்கண்ணு (72) நேற்று (அக்.31) பின்னிரவில் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆர்.துரைக்கண்ணு இளநிலை பட்டப்படிப்புப் பெற்றவர்.
அதிமுகவில் பொது வாழ்க்கையை தொடங்கியவர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2016 முதல் வேளாண்மைத் துறை அமைச்சராக பணியாற்றி வருபவர்.
மக்கள் எளிதில் அணுகக்கூடிய தொடர்பில் இருந்தவர். நல்ல பண்பாளர். கோவிட் - 19 தாக்குதலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். காலமானார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருநாவுக்கரசர், மக்களவை உறுப்பினர், காங்கிரஸ்
வேளாண் துறை அமைச்சராக பணியாற்றிய துரைக்கண்ணு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தியது மிகுந்த வேதனைக்குரியது. துரைக்கண்ணுவை எம்ஜிஆரின் அனுமதியோடு தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளராக நியமித்தேன். தன் கடும் உழைப்பால்படிப்படியாக அரசியலில் உயர்ந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தமிழக அமைச்சராகவும் தன் தொகுதிக்கும் தமிழக மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றினார். எளிமையும் அடக்கமும் நிறைந்த பழகுவதற்கு இனிய பண்பானவர் துரைக்கண்ணு.
அவரது எதிர்பாராத மறைவு அவரது குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும், அவரது கட்சிக்கும் பெரிய இழப்பாகும். அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள், தொகுதி மக்கள் மற்றும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரத்குமார், தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி, 2006, 2011, 2016 என தொடர்ந்து மூன்று முறை பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும், அதிமுகவின் ஒன்றியச் செயலாளர், மாவட்ட வேளாண் விற்பனை தலைவர் பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்து 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வேளாண் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட துரைக்கண்ணுவின் மறைவு அதிமுக இயக்கத்திற்கும், அவரை தெரிந்த நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.
அதிமுக தலைமைக்கு விசுவாசமாக செயல்பட்ட அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.