Published : 01 Nov 2020 03:12 AM
Last Updated : 01 Nov 2020 03:12 AM

‘நவ.1- தமிழ்நாடு நாள்’: தமிழகத்தை மேலும் உயர்த்த உறுதியேற்போம்: முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை

நவம்பர் 1-ம் தேதியான இன்று‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர்மற்றும் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழகத்தை மேலும் உயர்த்த உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

முதல்வர் பழனிசாமி: மொழிக்காக பல காலகட்டங்களில் நம் முன்னோர் நடத்திய போராட்டங்களால் மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தன. 1.11.1956-ம் ஆண்டுதமிழ் பேசும்பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் எனஆனது. இத்தகைய தனித்தன்மைமிக்க நிலப்பரப்புக்கு அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘தமிழ்நாடு நாள் விழா’ சென்ற ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணாவைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவர்களின் நெறியைப் பின்பற்றி, தற்போதும் தமிழ்வளர்ச்சித் திட்டங்கள்தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘தமிழ் தன்னையும் வாழ வைத்துக் கொண்டு பிற மொழிகளையும் வளர்த்தெடுக்கும் ஆற்றலைப் பொருந்திய மொழி’ என்று அண்ணா எடுத்துக் காட்டியுள்ளார். அவர்தம் வழியில் தமிழ் பேசும்நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதில் தொடர்ந்து பாடுபடுவோம் என்ற உறுதி ஏற்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்று கோரிஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ராமுலு உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் ஈந்ததை அடுத்து, 1953-ல் ஆந்திரா என்ற தனி மாநிலம், தெலுங்கு பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய இனங்களைச் சார்ந்த மக்களின் கோரிக்கையால், 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பல உருவாயின. நவம்பர் 1, 1956 அன்று சென்னை மாகாணத்துடன் இருந்த திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன.

தமிழகத்தை பொருளாதார வலிமைமிக்க மாநிலமாகவும் கல்வி, தொழில் வளர்ச்சி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகவும் உருவாக்கியதில் திமுக அரசின் பங்கு மகத்தானது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டி, அண்ணா பெருமைப்படுத்தினார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தநவம்பர் 1-ம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்.

மதிமுக பொதுச் செயலாளர்வைகோ: பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தை சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தை திணித்து, மாநில அதிகாரங்களை பறித்து, ‘இந்துராஷ்டிரம்’ எனும் கனவை நனவாக்க துடிக்கும் சக்திகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மரபு உரிமைகளையும், மொழி, இன, மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மதராஸ் மாகாணம் என்றபெயரை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி தியாகி சங்கரலிங்கம் என்பவர் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிர் நீத்தார். அவரின் வேண்டுகோளின்படி 1967-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்றுபெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடும், மக்களும் வளர்ச்சியடைய அனைவரும் ஒருமித்து பாடுபடுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ்நாடு பிறந்த தினத்தில், தமிழகத்தில் சமூக, பொருளாதார, அரசியல்,பண்பாட்டு தளங்களில் சமத்துவம்மலர பாடுபடுவோம். மனிதர்களைபிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் மனுஸ்மிருதியை நிராகரிப்போம்.

கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: சாதி, மத, அரசியல் வேறுபாடு இன்றி தமிழன் என்ற ஒற்றை உணர்வோடு அனைவரும் தமிழ்நாடு தினத்தை கொண்டாடுவோம். தமிழகத்தை ஊழல் இல்லா மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x