விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு அளித்த சகாயம் ஐஏஎஸ்: சமூகத்துக்கான பங்களிப்பை செய்ய விடவில்லை என ஆதங்கம்

விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு அளித்த சகாயம் ஐஏஎஸ்: சமூகத்துக்கான பங்களிப்பை செய்ய விடவில்லை என ஆதங்கம்
Updated on
1 min read

தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்.2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.கடந்த 7 ஆண்டுகளாக அறிவியல்நகர துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 57 வயதை நெருங்கியுள்ள அவர், ஓய்வு பெற 3 ஆண்டுஉள்ள நிலையில், விருப்ப ஓய்வில்செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதற்கான கடிதத்தை, கடந்தஅக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அந்த கடிதத்தில், சமூகத்துக்கு தான் நேர்மையாக செய்ய வேண்டிய பங்களிப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விருப்ப ஓய்வு கோரிய தனது கடிதத்துக்கு அரசு பதிலளிக்காத நிலையில் சமீபத்தில் நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில், நவ. 30-க்குள் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்படி கோரியுள்ளார்.

அரசு இதுகுறித்து முடிவு எடுக்க 90 நாள் அவகாசம் உள்ளதால், விரைவில் முடிவெடுக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

திடீர் முடிவு ஏன்?

சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த நிலையில், அவர் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். தொடர்ந்து, இந்திய மருத்துவத் துறை இயக்குநர் என இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டில் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட சகாயம், 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கிறார். ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த, சமூக பங்களிப்புக்கான துறைகளின் பதவிகள் அளிக்கப்படவில்லை என்ற மன வருத்தம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தன்னுடைய ‘பேட்ச் மேட்’ ஒருவருக்கு, புதிய ஐஏஎஸ் அதிகாரிகளைவிட ஊதியம் குறைந்திருந்ததை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதனால் அவருக்கு ஊதியத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், சகாயத்துக்கான ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் அவருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளால்தான் விருப்ப ஓய்வு முடிவுக்கு அவர் சென்றதாகவும் அவரது நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

விருப்ப ஓய்வு கேட்டுள்ள சகாயம், அரசியலுக்கு வரப் போவதாகதகவல் பரவியது. ஆனால், சமூகப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகும் அவர், அரசியலில் இறங்கமாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in