

எங்களின் உறுதியான முயற்சியும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்புமே சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் இடம் பெற்றதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர்கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர்’, சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், சிறந்த ஆட்சி நிர்வாகத்தில் அதிக புள்ளிகளை பெற்று பெரிய மாநிலங்களில் முதலிடத்தை கேரளாவும், 2-ம் இடத்தை தமிழகமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான செய்தி ‘தி இந்து’ குழும நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகளில் நேற்றுவெளியானது. இந்த செய்தியை மேற்கொள்காட்டி, தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டிலேயே நிர்வாகத்தில் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. எங்கள் உறுதியான முயற்சியும், மாநிலத்தின் முன்னேற்றத்தில் எங்களது அர்ப்பணிப்புமே இதற்கு காரணமாகும். இந்தியாவில் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை நிலைநிறுத்த தொடர்ந்து, அனைவரும் இணைந்து கடினமாகஉழைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.