

கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், கரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படு பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 300-க்கு மேல் இருந்துவந்தது. 5 மண்டலங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொற்றுதடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பரிசோதனை நடத்தி தொற்றுக்குள்ளான வர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புதல், அவர்கள் வசித்த வீட்டை தனிமைப்படுத்துதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் போன்ற பணிகள் நடைபெற்றன.
மேலும் தொற்று உறுதி செய்யப்படுவோர் அதிகம் உள்ளவீதிகளில் நோய் தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 3 பேருக்கு அதிகமாக தொற்றுக்குள்ளான வர்கள் வசிக்கும் வீதிகள், யாரும் செல்ல முடியாதபடி தகரத்தால் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக, மாநகரில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘ மாநகரில் இதுவரை 28 ஆயிரத்து 911 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாநகராட்சி மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலம் சராசரியாக 4,500 முதல் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மட்டும் தினமும் 3,600பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 4 நாட்களாக தினமும் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டோர் வசிக்கும் வீதிகள் 1,394 ஆக இருந்தன. இது படிப்படியாக குறைந்து நேற்று (அக்.31) 961 வீதிகளாக குறைந்தன. 3 பேருக்கும் குறைவான தொற்றாளர்கள் வசிக்கும் வீதிகள் 1,175-லிருந்து 909 ஆக குறைந்துள்ளன. 3 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டோர் உள்ள வீதிகள் 48 ஆகவும், 4 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டோர் உள்ள வீதிகள் 4 ஆகவும் உள்ளன. 5 பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப் பட்டோர் உள்ள வீதிகள் எதுவும் பதிவாகவில்லை’’ என்றனர்.
மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது,‘‘மாநகர் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகள் ஆரம்பக் கட்டம் முதல் தற்போது வரை எவ்வித தடையும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரம், கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படாமல் தினமும் ஒரே அளவுக்கு பரிசோதிக்கப்பட்டுவருகிறது’’ என்றார்.