

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, 18-வது வார்டில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
சிறிய மழைக்கே இங்குள்ள பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும். போதிய வடிகால் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அவதிப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக, பொதுமக்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி நிர்வாகம் 3.2 கி.மீ. தொலைவுக்கு ரூ.7.35 கோடி செலவில் புதிதாக மழைநீர் வடிகால் கட்ட நிதி ஒதுக்கியது. அண்மையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணி மிகவும் மோசமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இங்கு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது.
இது தொடர்பாக, நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தற்போது மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இப்பணி மிகவும் மோசமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள 60 அடி பிரதான சாலையில் ஏற்கெனவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் போது, அந்த மின்கம்பங்களை அகற்றாமல், அதன் நடுவே கால்வாய் அமைத்து வருகின்றனர். இவ்வாறு கால்வாய் அமைக்கும்போது முன்கூட்டியே மின்வாரியத்துக்கு உரிய தகவல் கொடுத்து, மின்கம்பத்தை மாற்றுவதற்கான பணத்தையும் மாநகராட்சி செலுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு செலுத்தாததால் மின்கம்பங்கள் அகற்றப்படவில்லை.
இதனால், கால்வாயில் தண்ணீருடன் குப்பைகள் சேர்ந்து வந்து, மின்கம்பத்தால் குப்பை தேங்கி நின்று கால்வாயில் அடைப்பு ஏற்படும். அத்துடன், கால்வாயின் பக்கவாட்டில் 5 அடி இடைவெளிக்கு ஒரு துளை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால்தான் சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாயில் செல்லும். ஆனால், அதுபோன்று எவ்வித துளையும் கால்வாயில் அமைக்கப்படவில்லை.
இதுபோன்ற பணிகள் நடைபெறும்போது, மாநகராட்சி பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். ஆனால், அவர்கள் யாரும் வராததால், ஒப்பந்ததாரர் அவர் இஷ்டத்துக்கு இப்பணியை செய்து வருகிறார்.
எனவே, மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் உடனடியாக இப்பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.