

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டியை அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த ஊழியர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் உள்ள சிடி ஸ்கேன் எடுக்கும் அறைக்கு எதிரே நேற்று முன்தினம் இரவு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு கால்களிலும் ரத்த காயங்களுடன் படுத்துக் கிடந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் விசாரித்ததில், அவர் ஆதரவற்றவர் என்பதும், தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை ஆட்டோவில் அழைத்து வந்து மருத்துவமனையில் விட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மூதாட்டியை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோயால் இரு கால்களிலும் புண் ஏற்பட்டுள்ளதால் மூதாட்டியை அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து கவனித்து வருகின்றனர். மனித நேயத்துடன் செயல்பட்ட ஊழியர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.