

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றவர்களின் மத நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது.
பெரியாரை விட கடவுள் மறுப்பாளர் யாரும் இல்லை. ஆனால் அவரே ஆன்மிக நிகழ்வில் வழங்கப்பட்ட விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டார். இதனால் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வேல் யாத்திரை டிச. 6-ல் முடிகிறது. அந்த தினம் பாஜகவுக்கு புனித நாள். அம்பேத்காரின் பிறந்த நாள். இதனால் அன்று வேல் யாத்திரையை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
வேல் யாத்திரை எதிர்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகையால் பாதிப்பை சந்திக்கும் கட்சிகள் அவர் தொடர்பான அவதூறு அறிக்கையை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
2021 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக இரண்டு இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.