Published : 31 Oct 2020 07:19 PM
Last Updated : 31 Oct 2020 07:19 PM

தமிழக அரசு அறிவித்துள்ள 10 தளர்வுகள் என்னென்ன?- முழு விவரம்

சென்னை

ஊரடங்கு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டாலும் தமிழக அரசு 10 வகையான தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் திரையரங்குகள் திறப்பு, பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில் சேவை, கோயம்பேடு காய்கறி சிறு கடைகள் ஆகியவை அடங்கும். இவை திறக்கப்படும் தேதிகள், நிபந்தனைகள் குறித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“அக்.31 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், நவம்பர் 30 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

1) பள்ளிகள் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவமபர் 16 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

2) பள்ளி /கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

3) கோயம்பேடு வணிக வளாகம்:

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவ. 2 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவ. 16 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) சின்னதிரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

6) திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளைத் திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளைப் பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றைத் திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

7) மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

8) பொழுதுபோக்கு பூங்காக்கள் ((Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவ.10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

9) நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

10) ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1.11.2020 முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x