Published : 31 Oct 2020 07:00 PM
Last Updated : 31 Oct 2020 07:00 PM

கரோனாவால் வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் கூடாது: அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தல்

கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளோடு கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட முகாம் அலுவலகத்தில் இன்று (31.10.2020) கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

''கரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்திலும், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளில் எவ்வித சுணக்கமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளான உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் பணி, கோவை- திருச்சி பிரதான சாலையில் ஸ்டாக் எக்சேஞ்சில் இருந்து ரெயின்போ வரையிலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ. நீளத்திலான உயர்மட்ட மேம்பாலப் பணிகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் பணிகள், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள், கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குறிச்சிக் குளக்கரை பொலிவுபடுத்தும் பணி, பந்தய சாலையில் சிந்தட்டிக் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கும் பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகள், நொய்யல் ஆற்றினைப் புனரமைக்கும் பணி, பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித் திட்டம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் போன்றவற்றை அந்தந்தத் துறை அலுவலர்கள் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் பொதுமக்களைக் கன மழையின்போது பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்றத் தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மின்மோட்டார்கள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வட்டங்கள்தோறும் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட அவசர காலக் கட்டுப்பாட்டு மையத்தை (1077), தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x