

மதுரையில் பல்வேறு அரிய புத்தகங்கள் மழையால் சேதமடைந்த நிலையில், சாலையோரக் கடைக்காரர்கள் அரசிடம் நிவாரணம் கோருகின்றனர்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்று பழைய புத்தகக் கடைகள். மிகப் பழமையான, அரிய புத்தகங்கள் பொக்கிஷம் போல இங்கே கிடைக்கும் என்பதால், புத்தகச் சேகரிப்பாளர்கள், வாசகர்கள் பலர் வெளியூரில் இருந்து மதுரைக்கு வருவதுண்டு. நேதாஜி ரோடு, பெரியார் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பழைய புத்தகக் கடைகள் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. அதில் பெரும்பாலானவை சாலையோரக் கடைகள்.
நேற்று நள்ளிரவில் மதுரையில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. பெரியார் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரையிலான பகுதி பள்ளமான இடம் என்பதால், அங்கே ஒட்டுமொத்த மழைநீரும் குளம் போலத் தேங்கியது. இதனால் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் நனைந்து, அந்த வெள்ளத்தில் சரிந்தன. இதில் சுமார் 100 புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், 500 புத்தகங்கள் மழையில் நனைந்து கடுமையாகச் சேதமடைந்தன. அதில் சில புத்தகங்கள் 50 முதல் 80 ஆண்டுகள் பழமையானவை.
இதுகுறித்துத் தங்கரீகல் தியேட்டர் வாசலில் கடை வைத்திருக்கும் பாலு, சரவணன் ஆகியோர் கூறுகையில், "புத்தகங்களை என்னதான் தார்ப்பாய் போட்டு மூடி வைத்தாலும் சில நேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது. வாடகைக்குக் கடை பிடித்துப் புத்தகங்களைப் பாதுகாக்கும் அளவுக்கு வசதியில்லாததால், இப்படிச் சாலையோரம் கடை வைத்திருக்கிறோம்.
பலமுறை இப்படி மழையால் பாதிக்கப்பட்டும், எங்களுக்கு அரசுத் தரப்பில் எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. அரசு எங்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்க வேண்டும்" என்றனர்.