

வேலை கிடைத்தால் கடவுளுக்கு உயிரை காணிக்கை ஆக்குவதாக விபரீதமாக வேண்டிய வங்கி உதவி மேலாளர் வேலை கிடைத்த இரு வாரங்களில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த எள்ளுவிளையை அடுத்துள்ள புத்தன்காட்டைச் சேர்ந்தவர் செல்லசுவாமி. இவரது மகன் நவீன் (32). இவர் நாகர்கோவில் புத்தேரி ரயில்வே பாலத்தின் கீழ் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இவரது உடலை நாகர்கோவில் ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையின் போது நவீனின் பேண்ட் பாக்கெட்டில் கடிதம் ஒன்று எடுக்கப்பட்டது. அதை ரயில்வே போலீஸார் இன்று கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கியில் வேலை கிடைத்தால் கடவுளுக்கு உயிர்ப் பலி கொடுப்பதாக அளித்திருந்த வேண்டுதலை நிறைவேற்ற, அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பொறியாளரான நவீன் பல ஆண்டுகளாக வேலை இன்றி தவித்து வந்த நிலையில் வங்கி வேலைக்கான தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு மும்பையில் பாங்க் ஆப் இண்டியாவில் உதவி மேலாளராக வேலை கிடைத்துள்ளது.
இதனால் தனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் மும்பையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த நவீன் அங்கிருந்து நாகர்கோவில் வந்து புத்தேரியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
நவீனின் கடிதத்தில், நான் படித்து முடித்து பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு வேலை கிடைத்தால்
என் உயிரையே நேர்த்திக்கடனாகத் தருவதாக கடவுளிடம் வேண்டி இருந்தேன். தற்போது நான் வேண்டியபடி வங்கியில் வேலை கிடைத்துள்ளது. எனவே நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் எனது உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கியில் மகனுக்கு வேலை கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் இருந்த நவீனின் பெற்றோர், அவர் தற்கொலை செய்து கொண்டதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.