Last Updated : 31 Oct, 2020 04:58 PM

 

Published : 31 Oct 2020 04:58 PM
Last Updated : 31 Oct 2020 04:58 PM

மீண்டும் மூன்றாவது அணியா?- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

மனுஸ்மிருதி விஷயத்தில் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகப் போராடும் பாஜக, பெண்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் 33% இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கரோனா தொற்றில் இருந்து குணமாகி வந்திருக்கும் கே.பாலகிருஷ்ணன் 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

நாடு கரோனா பாதிப்புக்கு உள்ளாகி 7 மாதங்களாகிவிட்டன. அது மக்களின் அன்றாட வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

''கரோனா மக்களின் அன்றாட வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. நோய்த் தொற்று காரணமாக ஒட்டுமொத்தமாக முடங்கிப் போகும் நிலைமை எனக்குத் தெரிந்து இதற்கு முன்பு வந்ததில்லை. நோயோடு சேர்ந்து அரசாங்கமும் மக்களைப் படுத்தி எடுத்துவிட்டது. திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வெளியூரில் தங்கி வேலை பார்த்தவர்கள், புலம்பெயர்த் தொழிலாளர்கள், மாணவர்கள், உறவினர் வீடுகளுக்குச் சென்றோர் என்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நிலைகுலைந்து போனார்கள்.

வயலில் விளைந்து கிடந்த வாழை, கொய்யா, திராட்சைப் பழங்கள் அறுவடை செய்ய முடியாமலும் விற்க முடியாமலும் நாசமாயின. இன்னொரு பக்கம் பசி, பட்டினியால் மக்கள் செத்து மடிந்தார்கள். இத்தனைக்கும், ஜனவரி மாதமே கரோனா அபாயம் பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. பெரும் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் மத்திய அரசு கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருந்திருந்தால் நம் நாடு இந்த அளவிற்குப் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை.

வேலையிழப்பு, வருமான இழப்பு காரணமாக அவதிப்படும் மக்களைக் காக்க மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தினோம். மக்கள் அதை வாங்கி இரும்புப் பெட்டியில் பூட்டி வைக்கப்போவதில்லை. அந்தப் பணத்துக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவார்கள். வியாபாரம் பெருகும். உற்பத்தி தேவைப்படும். எனவே, வேலைவாய்ப்பும் உருவாகும் என்று சொன்னோம். ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார அறிஞர்களும் அதைத்தான் சொன்னார்கள்.

ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரிப் பங்கைக்கூட, இந்த அவசர காலத்தில் கொடுக்காமல் வஞ்சித்துவிட்டது. அரசின் தவறான நடவடிக்கைகளால் இன்று நாட்டின் ஜி.டி.பி. மைனஸ் 23 சதவீதத்துக்குப் போய்விட்டது. உலகப் பட்டினிக் குறியீட்டில் பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்தைவிட மோசமான நிலைக்கு நாடு போய்விட்டது.

தமிழ்நாட்டை பாஜக வஞ்சித்துவிட்டது என்கிறீர்கள். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் பாஜக இங்கே வளர்ந்திருப்பது போல தெரிகிறதே?

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பது ஒரு கட்டுக்கதை. வெளிப்படையான ஒரு இலக்கு அல்லது கொள்கையை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் அரசியல் கட்சியின் வேலை.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் உரிமைக் குரல்களுக்குச் செவி சாய்த்து, தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஆட்சி செய்தால்தானே தமிழ்நாட்டில் வளர முடியும்? அது எதையுமே செய்யாமல், தமிழ்நாட்டை வேண்டுமென்றே வஞ்சிக்கிற கட்சியை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துவிடுவார்களா?

குஷ்புவையும், வேறு கட்சியில் அதிருப்தியில் இருந்த ஓரிருவரையும் சேர்த்துவிட்டால், பாஜக வளர்ந்துவிட்டதாக அர்த்தமா? ஊரறிந்த சமூக விரோதிகளைக்கூட அவர்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று போலீஸ் அதிகாரியே சொல்லியிருக்கிறார். ஆட்சி அதிகாரம், பண பலத்துடன், சில மீடியாக்களையும் கையில் போட்டுக்கொண்டு, ஊதிப்பெரிதாக்கிய பிம்பம்தான் பாஜகவின் வளர்ச்சி. தேர்தல் வந்தால் அவர்களின் உண்மையான பலம் தெரிந்துவிடும்.

கந்த சஷ்டி, மனுஸ்மிருதி என்று பாஜகவுக்குத் தோதான பல பிரச்சினைகளை உங்கள் அணியில் இருப்போரே எடுத்துக் கொடுக்கிறார்களே?

யாரும் எடுத்துக் கொடுக்காவிட்டாலும், அவர்கள் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இப்படியான பிரச்சினைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் மேலெழுந்து விடக்கூடாது என்று, இப்படியான பிரச்சினைகளைத் கிளப்புவதை வழக்கமாகவே வைத்திருக்கிறது பாஜக.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, தொழில் முடக்கம், பொருளாதார மந்தம், விவசாயிகள் பிரச்சினை, தனியார் மயம், நீதித்துறையில் தலையீடு, கல்வி காவிமயம் என்று மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தும் பாஜக, அதுபற்றி யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காகத் தேவையில்லாத பிரச்சினைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிக்கொண்டு வருகிறது.

ஒரு யூடியூப் சேனலில், ஒரு இணையக் கருத்தரங்கில் பேசியதை நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினையாகக் காட்டி, முக்கியப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளப் பார்க்கிறார்கள். மனுஸ்மிருதியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் திருமாவளவன். அப்படி இல்லை என்றால் இல்லை என்று கருத்துச் சொல்ல வேண்டியது தானே? அதைவிட்டுவிட்டு அவர் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று பிரச்சினையைத் திசை திருப்புவது ஏன்?

பெண்களுக்காக இவ்வளவு தூரம் பரிந்து பேசும் அவர்கள், நாடாளுமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் முடக்கி வைத்துள்ள 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றலாமே? நினைத்ததை நினைத்தவுடனே சட்டமாக்கும் அளவுக்கு பலமுள்ள பாஜக, மகளிர் மசோதாவை ஏன் நிறைவேற்றவில்லை?

தமிழ்நாட்டில் இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் பெண்கள், குழந்தைகள் மீது 80க்கும் மேலான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்று சம்பவங்கள் வாரியாக ஒரு பட்டியலைத் தயாரித்து முதல்வருக்கு மனு அனுப்பினோம். அதில் ஒரு சம்பவத்திலாவது பெண்களுக்கு ஆதரவாக பாஜகவோ, ஆர்எஸ்எஸ்ஸோ குரல் எழுப்பியதா? இப்படி, பெண்களின் உண்மையான பிரச்சினை பற்றி பேசாமல், திசை திருப்புவதே இவர்களது வேலையாக இருக்கிறது.

பாஜக தலைவர் முருகன், ஒரு மாத காலம் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறாரே?

இப்போது வேல் யாத்திரை நடத்தும் அளவுக்கு நாட்டில் என்ன பிரச்சினை வந்தது, என்ன கட்டாயம் ஏற்பட்டுவிட்டது? முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை யாராவது தடுத்தார்களா? அல்லது இதுநாள் வரையில் தமிழர்கள் முருகனைக் கும்பிடாமல் இருந்தார்களா? இவர்களுக்கு எப்போதுமே கடவுள் மீது உண்மையான பக்தியோ, ஆன்மிக நாட்டமோ கிடையாது. நாட்டை எப்போதும் மதப்பதற்றத்துடனேயே வைத்திருக்க வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதே இவர்களது இலக்கு.

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை முடக்கி வைத்துக்கொண்டு, பெண்களுக்காகப் போலியாகப் போராடுவதைப் போலவே, பெரும்பான்மை இந்துக்களின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டு இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் நாடகம் நடத்துகிறார்கள். அடிப்படையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இந்த வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் உரையாடுகிறாரே. அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டா?

அந்த நிகழ்ச்சியைக் கேட்கிற அளவுக்குப் பொறுமை இல்லை. ஆனால், மறுநாள் பத்திரிகைகளில் வரும் செய்தியைப் படிப்பேன். ஒரு பிரதமர் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவது உண்மையிலேயே நல்ல விஷயம். கூடவே, மக்களில் சிலருடன் உரையாடுவதும் வரவேற்கக்கூடியதே. ஆனால், ஒரு பிரதமர் என்ன பேச வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்களோ அது எதையும் அவர் பேசுவதில்லை.

நாட்டு நாய் வளர்ப்பது நல்லதா? காட்டு நாய் வளர்ப்பது நல்லதா? என்பதா இன்று இந்தியாவின் தலையாயப் பிரச்சினை? நம் நாட்டு மக்களைப்ப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை. உண்மையிலே மக்கள் பிரச்சினையை அறிந்துகொள்ள, தீர்த்துவைக்க அவர் விரும்பினால் எதிர்க் கட்சியினருடனும், பத்திரிகையாளர்களுடனும் உரையாட வேண்டும்.

தமிழ்நாட்டில் மீண்டும் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது என்று தேமுதிக திரும்பத் திரும்பச் சொல்கிறது. ஒருவேளை, பழைய கூட்டாளியான உங்களையும் அழைத்தால் அந்த அணிக்குச் செல்வீர்களா?

அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பாஜக, அதிமுக எனும் மக்கள் விரோத அரசுகளை அகற்றுவதற்கு ஒரு வலுவான அணி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதில் 3-வது அணி, 4-வது அணி, 5-வது அணி என்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. பாஜக, அதிமுக அணியும், அதை எதிர்க்கிற அணியும்தான் இந்தத் தேர்தலில் பிரதானமாக இருக்கும். மூன்றாவது அணி அமைப்பதற்கெல்லாம் வழியே இல்லை. அமைந்தால் அதற்கு எங்கள் ஆதரவும் இருக்காது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், அப்படி ஒரு அணி அமைந்தால் அது பாஜக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்குத்தான் பயன்படுமே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராது.

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதைப் பற்றிப் பேச திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தயங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கம்யூனிஸ்ட்கள் ஏன் ஊழல் பற்றிப் பேசுவதில்லை?

ஊழல் என்பது முக்கியமான பிரச்சினை என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதிமுக அரசு வரலாறு காணாத அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஆட்சியில் இருப்போரின் ஊழலை எதிர்த்து எந்த அளவிற்குப் போராட வேண்டுமோ, அதைவிடக் கூடுதலாக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் போராட வேண்டிய தேவை வந்துவிடுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள். மேற்கு மாவட்டங்களில் மின்சாரக் கோபுரம் அமைப்பதை எதிர்த்தும், கெயில் குழாய் பதிப்பதை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கும்போதே, மீத்தேன் பிரச்சினை வந்தது. அடுத்து எட்டு வழிச்சாலை பிரச்சினை. பிறகு விவசாய மசோதா. இப்படி அடுக்கடுக்காய் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டிய தேவையும் இருக்கிறது. அதற்காக ஊழல் இரண்டாம்பட்ச பிரச்சினைதான் என்று சொல்லவில்லை. ஆனால், அதைவிடக் கூடுதலாக மக்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறோம். அதிமுக அரசின் ஊழலையும் அம்பலப்படுத்துவோம்.

இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள் அனைத்திலும் தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சிகள் பாஜகவுடன் முரண்படுகின்றன. முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாஜக கொண்டுவந்தபோது, திமுக அணியில் இருந்துகொண்டு அதை ஆதரித்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட்தான். அப்படியென்றால், இட ஒதுக்கீடு விஷயத்தில் பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வித்தியாசமே இல்லையா?

தமிழ்நாட்டில் இருக்கும் சூழல் வேறு, அகில இந்திய சூழல் வேறு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 94 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு வரம்பிற்குள் வந்துவிட்டார்கள். எனவே, இங்கே மீதமிருக்கிற மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழவில்லை. ஆனால், இந்தியாவின் இதர மாநிலங்களில் இன்னமும் 50 சதவீதம் பேருக்குக் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், மீதமுள்ள மக்கள் எங்களுக்கும் ஏதாவது ஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

நாங்கள் அகில இந்தியக் கட்சி என்பதால், தமிழ்நாட்டை மட்டும் அளவுகோலாக வைக்க முடியாது. எனவே, அந்த மக்களின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, நாங்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தோம். நாங்கள் மட்டுமல்ல அகில இந்தியக் கட்சிகள் பலவும் அந்தச் சட்டத்தை ஆதரித்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எங்களது நிலைப்பாடு என்னவென்றால், 72 சதவீத மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இங்கே 50 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு இருக்கிறபோது, அவர்களைவிட முன்னேறிய, வெறும் ஐந்தாறு சதவீதம் மட்டுமே உள்ள பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதே.

எனவே, இடஒதுக்கீட்டின் கீழ் வராத மக்களைக் கணக்கெடுத்து அதில் ஏழையாக இருப்போருக்கு மட்டுமே ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் சொன்னோம். பாஜகவின் நிலைப்பாடு அதுவல்ல. இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு என்பதே தங்கள் சித்தாந்தத்துக்கு எதிரானது, அதை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். மருத்துவ உயர் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் இழுத்தடிப்பதற்கு அதுதான் காரணம்.

மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடத்தையும், உயர் படிப்பில் 50 சதவீத இடத்தையும் மாநிலங்களிடம் இருந்து அகில இந்திய கோட்டாவுக்கென வாங்கிக்கொண்டு, அங்கே இட ஒதுக்கீடு தர மாட்டோம் என்பது அநீதியானது. என்னைக் கேட்டால் அகில இந்திய கோட்டாவே தேவையில்லாதது. அதை ஒழித்துவிட்டால் அந்த சீட்டுகள் எல்லாம் தானாகவே தமிழ்நாட்டிற்கு வந்துவிடும். பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடும் அமலாகிவிடும்.

தமிழகத்தில் முன்னெப்போதையும் விட அதிகாரத்தை நோக்கி சாதி ரீதியாக மக்கள் அணி திரள்வது அதிகரித்துள்ளதே. ஒரு பொதுவுடமைவாதியாக இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தேர்தல் நெருங்கினாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதி ரீதியான அணி திரட்டல்கள் நடப்பது உண்டுதான். ஆனால், இம்முறை மத்தியில் ஆளும் பாஜகவே மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுகிற, பிரித்தாளுகிற வேலையில் இறங்கியிருக்கிறது. இன்னொரு ஆளுங்கட்சியான அதிமுகவிலும் கூட முதல்வர் பதவி, கட்சிப் பதவிகளை முன்வைத்து சாதி ரீதியிலான அணி திரட்டல்கள் நடக்கின்றன.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இம்மாதிரியான பேச்சே வந்ததில்லை. இன்னொரு பக்கம் டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் முழுக்க முழுக்க சாதிப் பெருமிதம், பெரும்பான்மையை முன்வைத்தே அரசியல் பேசுகிறார்கள். பகுத்தறிவு, முற்போக்கு, இடதுசாரி இயக்கங்கள் கோலோச்சும் தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடப்பது ரொம்பவே வேதனையளிக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் எதிர்காலம் சூன்யமாகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கொள்கை முழுமையாக அமலானால் எல்லா சாதிக்காரர்களும்தான் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக, பொதுத்துறைகள் ஒழிக்கப்பட்டு, அரசுத் துறைக்கு ஆளெடுப்பே இல்லாத நிலை ஏற்பட்டால் அங்கே எப்படி இட ஒதுக்கீடு கிடைக்கும்?

விவசாயம், தொழில்துறை, வேலைவாய்ப்பு, மொழி என்று எல்லாவற்றையும் பாதுகாப்பதற்காக எல்லோரும் சாதியைக் கடந்து ஒன்றுதிரள வேண்டிய நேரத்தில், யாரோ சிலரது அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் சாதி ரீதியாகப் பிரிவது நம்மைப் படுகுழியில் தள்ளிவிடும். எனவே, சாதி உணர்வைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும், மக்கள் கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்''.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x