Published : 31 Oct 2020 03:56 PM
Last Updated : 31 Oct 2020 03:56 PM

கரோனாவால் தொலைந்த வாழ்வாதாரம்: படப்பிடிப்பையும் சுற்றுலாப் பயணிகளையும் எதிர்பார்த்து நிற்கும் செட்டிநாடு

கரோனா தளர்வுகளால் தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பழையபடி தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வழி பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் நிற்கிறார்கள் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுலா மற்றும் சினிமா படப்பிடிப்புகளை நம்பி வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்.

செட்டிநாட்டுப் பகுதியில் நகரத்தார் (செட்டியார்) வசிக்கும் 75 ஊர்கள் இருக்கின்றன. இதன் தொகுப்புதான் பேச்சுவழக்கில் ‘செட்டிநாடு’ என்றழைக்கப்படுகிறது. இந்த ஊர்களில் சிறிதும் பெரிதுமாக மாளிகை வீடுகள் ஏராளம் இருக்கின்றன. இந்த மாளிகைகளுக்குச் சொந்தக்காரர்கள் பலரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பதால் பெரும்பாலும் இவை பூட்டியே கிடக்கும். ஆனால், சினிமா கம்பெனிகளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் செட்டிநாட்டை நோக்கித் திரும்பிய பிறகு இந்த மாளிகைகளுக்கும் மவுசு கூடிவிட்டது.

இப்போது மாளிகை வீடுகளுக்குச் சொந்தக்காரர்கள் பலரும் தங்களது வீடுகளை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடுகிறார்கள். செட்டிநாட்டுப் பகுதியில் மட்டும் சுமார் 300 மாளிகை வீடுகள் சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்படுவதாகச் சொல்கிறார் திரைப்படத் தயாரிப்பு மேலாளரும், சினிமா தணிக்கைக் குழு உறுப்பினருமான காரைக்குடி கே.டி.குமரேசன்.

இதேபோல், மதுரைக்கு அருகில் இருப்பதால் அங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பகுதியினர் அரண்மனை போன்ற செட்டிநாட்டு, மாளிகை வீடுகளின் அழகை ரசிக்கவும் கலைப் பொருட்களை வாங்கிச் செல்லவும் செட்டிநாட்டுப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்காகவே செட்டிநாட்டின் பாரம்பரிய வீடுகளை அதன் உரிமையாளர்கள் ரிசார்ட் மற்றும் ஓட்டல்களாக மாற்றி வைத்திருக்கின்றனர். இப்படி மட்டுமே செட்டிநாட்டுப் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள் இருக்கின்றன.

கரோனா முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை நின்று போனதால் இந்த ரிசார்ட்டுகள் அனைத்தும் வந்து தங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன. சினிமா கம்பெனிகளும் வராததால் சினிமா படப்பிடிப்புகளை நம்பி இருக்கும் மக்களும் வருமானத்தை இழந்து நிற்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குமரேசன், ''சாதாரணமாக ஒரு சராசரி படத் தயாரிப்பு கம்பெனி செட்டிநாட்டுப் பகுதிக்கு வந்தால் ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்வார்கள். அதுவே பெரிய கம்பெனிகளாக இருந்தால் இன்னும் கூடும். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களின் படப்பிடிப்பும் இந்தப் பகுதியில் நடக்கும். ஒரே சமயத்தில் நான்கு கம்பெனிகள்கூட இங்கே படத் தயாரிப்பில் இருந்த காலம் உண்டு. இங்கே எடுக்கப்படும் சினிமா, சீரியல்கள் நிச்சயம் வெற்றிபெறும் என்னும் நம்பிக்கையும் அதற்கு ஒரு காரணம்.

இங்கு நடத்தப்படும் சினிமா மற்றும் டெலி சீரியல் படப்பிடிப்புகளில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மட்டுமே காரைக்குடி பகுதியில் சுமார் 500 பேர் இருக்கிறார்கள். தவிர, வாடகைக் கார் ஓட்டுநர்கள், இறைச்சி, காய்கனி சப்ளையர்கள், திருமண மண்டபம், சிறு லாட்ஜ்காரர்கள், சினிமா செட் போடும் கார்ப்பென்டர்கள் எனக் குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல், இங்கு சினிமா படப்பிடிப்புகளை நம்பி இருக்கிறார்கள்.

இங்குள்ள ரிசார்ட்டுகள் ஒவ்வொன்றிலும் சுமார் 30 அறைகள் இருக்கும். கடும் வெயில் காலங்கள் தவிர்த்து மற்ற 8 மாதங்களில் இங்கே சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். அதிலும் மழை மற்றும் பனிக் காலங்களில் இங்குள்ள பிரபல ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அனைத்துமே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து கிடக்கும். இவர்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கில் நம் பகுதிக்கு வருமானம் கிடைக்கும்.

கே.டி.குமரேசன்.

பெரும்பாலும் ஃபிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள்தான் அதிக அளவில் இங்கு வருவார்கள். மாளிகை வீடுகளைப் பார்த்து ரசிக்க மட்டுமல்லாது செட்டிநாட்டுப் பாரம்பரியக் கலைப் பொருட்களை வாங்கிச் செல்வதிலும் அவர்கள் அதிக ஆர்வமாய் இருப்பார்கள். இவர்களுக்காகவே காரைக்குடி பகுதியில் இருக்கும் சில பிரபல ஓட்டல்களில் தமிழ், ஆங்கிலம், ஃபிரெஞ்சு என மூன்று மொழிகளிலும் மெனு எழுதி வைப்பார்கள்.

இதேபோல், செட்டிநாட்டுப் பகுதியில் நடக்கும் கோயில் திருவிழாக்களைப் படம்பிடிக்கவும் சினிமா கம்பெனிகள் வருகின்றன. இப்போது கோயில் திருவிழாக்களும் தடைப்பட்டுக் கிடப்பதால் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, தனுஷ் - அக்‌ஷய் குமார் நடிக்கும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் 7 நாட்கள் இங்கு நடந்தது. இது தொடர வேண்டும்.

வழக்கம் போல சினிமா கம்பெனிகள் அடுத்தடுத்து செட்டிநாட்டுப் பகுதிக்கு வரவேண்டும். அதேபோல், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பகுதிக்கு வந்து செல்ல அரசு உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழில்களை நம்பி இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் அவர்களது குடும்பத்தினரும் இழந்து நிற்கும் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற முடியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x