

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாகக் கொள்முதல் செய்யக் கோரியும், மழையில் நனைந்து சேதமடைந்த நெல்லுக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், திருவையாற்றில் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தினகரன் இன்று (அக். 31) வெளியிட்ட அறிக்கை:
"காவிரி டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக மழையில் நனைந்து, சேதமடைந்து வருகின்றன.
கரோனா ஊரடங்கு நேரத்திலும் மிகுந்த இன்னல்களுக்கிடையே பாடுபட்டு விளைவித்த நெல்லினை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட வேண்டுமென ஏற்கெனவே அமமுகவின் சார்பில் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனாலும், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து பேட்டிகளைக் கொடுப்பதிலேயே முதல்வரும், உணவுத்துறை அமைச்சரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனவே, டெல்டா விவசாயிகளின் துயரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அமமுகவின் சார்பில் திருவையாறு, தேரடியில் வருகிற நவ. 2, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் அமமுக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.