பயிற்சி முடித்த 278 ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம்

சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வீரர்கள்.
சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வீரர்கள்.
Updated on
1 min read

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 278 இளம் ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுவர்.

46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 278 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாகப் பணிபுரிய சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி இன்று (அக். 31) நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகேஷ் பேரக்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக்கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

கரோனா அச்சுறுத்தலால் பயிற்சி வீரர்களின் அணிவகுப்பு தனிமனித இடைவெளியுடன் நடைபெற்றது.

வெலிங்டன் ராணுவ மைய கமாண்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பயிற்சியின்போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

அவர் பேசும்போது, "வெலிங்டன் ராணுவ மையம் இந்திய ராணுவ வீரர்களுக்கத் தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. மிகச்சிறந்த தரமான பயிற்சி மேற்கொண்ட இளம் வீரர்களைப் பாராட்டுகிறேன். கரோனா காலகட்டத்தில் மிகக் கடினமாக உழைத்த வீரர்களையும், அவர்கள் பயிற்சி முடித்த பெருமைக்குரிய இத்தருணத்தில் விழாவில் பங்கேற்க முடியாத இளம் வீரர்களின் பெற்றோரை வாழ்த்துகிறேன்" என்றார்.

பயிற்சியை முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in