Last Updated : 31 Oct, 2020 01:20 PM

 

Published : 31 Oct 2020 01:20 PM
Last Updated : 31 Oct 2020 01:20 PM

தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு 

பிரதிநிதித்துவப்படம் : படம் உதவி ஃபேஸ்புக்

சென்னை

தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் நவம்பர் 4-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளே கேடிசி எனச் சொல்லப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையிலும் நல்ல மழை பெய்தது.

கடந்த வாரத்திலிருந்தே வெப்பச் சலனத்தாலும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியினாலும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில் இந்த மழை ஒரு போனஸ் போன்று அமைந்தது.

குறிப்பாகச் சென்னையில் 28-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மயிலாப்பூர் டிஜிபிஅலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், ரெட்ஹில்ஸ் ஏரி, நுங்கம்பாக்கம் பகுதியில் 100 மி.மீ. அதிகமாக மழை பெய்தது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே இரவில் 18 செ.மீ. மழையும், திருவள்ளூரில் 13 செ.மீ. மழையும் பதிவானது. சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 4-ம் தேதி முதல் தமிழகக் கடலோர மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் மழை தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது?

நவம்பர் 3 அல்லது 4-ம் தேதி கிழக்கில் வீசும் காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மீண்டும் மழை தொடங்கும். இந்த மழை அடுத்த 15 நாட்களுக்கு இடைவெளி விட்டு தொடரும்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை கிடைக்கும்?

வடகிழக்குப் பருவமழை தொடங்கி இன்னும் புதுச்சேரி பகுதிக்குக் கீழாக மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யவில்லை. ஆனால், நவம்பர் 3 அல்லது 4-ம் தேதி தொடங்கும் மழையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் மழை கிடைக்கும்.

உள்மாவட்டங்களில், மத்திய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா?

உள்மாவட்டங்களில் பெரும்பாலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால் கிழக்கிலிருந்து வரும் காற்றின் வலு குறைவாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் மழை கிடைக்கும். ஆதலால், உள்மாவட்டங்களில் வாய்ப்பு குறைவு. ஆனால், தென் மாவட்டங்களில் ஆங்காங்கே சில நாட்கள் மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

இன்றிலிருந்து (31-ம் தேதி) தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அதாவது கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும். அரபிக் கடலில் யுஏசி சிஸ்டம் கிழக்குப் பகுதி காற்றை இழுப்பதால், மேற்கு மாவட்டங்களுக்கு மழையைக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் கேரளக் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமாி உள்ளிட்ட கேரளத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதா?

இப்போதுள்ள கணிப்பின்படி அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை. பெரும்பாலும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனத்தால் மட்டுமே மழை கிடைக்கும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் லாநினா நிகழ்வு இந்த முறை செயல்படுவதால் வடகிழக்குப்பருவ மழை குறைவாகப் பெய்ய வாய்ப்புள்ளதா?

ஐஓடி எனப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் லாநினா இந்த முறை செயல்பட்டாலும் எதிர்மறையாகச் செயல்படுவது, அதாவது தாக்கம் குறைவுதான். இதற்கு முன்பிருந்த ஆண்டை வைத்து ஒப்பிடவும் முடியாது. என்னைப் பொறுத்தவரை இந்த முறை வடகிழக்குப் பருவமழை கடலோர மாவட்டங்களில் சிறப்பாக இருக்கும். இயல்புக்குக் குறைவில்லாமல் கூடுதலாகப் பெய்யவே வாய்ப்புள்ளது.

(பசிபிக் பெருங்கடலில் பெரு கடற்பகுதியில் கடல் நீரின் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அதற்குப் பெயர் எல்நினோ. இயல்பைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருந்தால் லாநினா. இயல்பான நிலையில் இருந்தால் என்சோ நியூரல் என்று பெயர்.)

வடகிழக்குப் பருவமழையில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா?

மழை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏதாவது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானால், அதன் மூலம் பரவலாக மழை கிடைக்கும். ஆனால், கிழக்கு நோக்கிய காற்றால் கிடைக்கும் மழை என்பது கடலோர மாவட்டங்களோடு பெரும்பாலும் நின்றுவிடும். ஆதலால் உள்மாவட்டங்களில் மழைக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எவ்வாறு இருக்கும்?

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரை மழையளவு குறைவுதான். ஆனால், சென்னை உள்ளிட்ட கேடிசி பகுதிகளில் 150 மி.மீ. பெய்தாலே பெரிய விஷயம் என்று நினைத்த நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது வரவேற்கக்கூடியது.

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை தீரும் வகையில் வடகிழக்குப் பருவமழை இருக்குமா அல்லது அடுத்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதா?

சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு இல்லை. அதுபற்றிக் கவலைப்பட வேண்டாம். அடுத்துவரும் நாட்களில் நல்ல மழைக்காலம் காத்திருக்கிறது. இதனால் சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் அனைத்தும் நிரம்பும் என நம்புகிறேன்.

வடகிழக்குப் பருவமழையின்போது மழை பெய்யும் கணிப்பு சில நேரங்களில் தவறுவதற்குக் காரணம் என்ன?

வடகிழக்குப் பருவமழையின்போது அனைத்துக் கணிப்புகளும் தவறுதலாக இருக்கும் எனக் கூற முடியாது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி போன்றவற்றில் ஏறக்குறைய சரியாகச் சொல்லிவிட முடியும். ஆனால் வெப்பச் சலன மழையைக் கணிப்பது கடினம்தான். எந்த இடத்தில் வெப்பச் சலன மழை கிடைக்கும், எந்த மாவட்டத்தில் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுக் கணிப்பது கடினம்தான்.

வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கும்போது, பருவமழை அளவு குறைவாக பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தொடங்க வேண்டும். ஆனால், இந்த முறை 28-ம் தேதி தொடங்கியது என்பதற்காக மழையளவு குறைவாக இருக்கும் எனக் கூற முடியாது. இதற்கு முன் தாமதமாகத் தொடங்கிய காலத்தில் மழையும் குறைவாக இருந்தது என்ற புள்ளிவிவரங்கள் இருந்தாலும், தாமதமாகத் தொடங்கிய காலத்தில் அதிகமான மழைப்பொழிவும் இருந்துள்ளது.

கடலோர மாவட்டங்கள்தான் வடகிழக்குப் பருவமழையை நம்பி இருப்பவை. இந்த முறை நிச்சயம் கடலோர மாவட்டங்களுக்குப் பற்றாக்குறை மழை இருக்க வாய்ப்பில்லை. இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

கோப்புப்படம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 28-ம் தேதி திடீரென விடிய விடிய மழை பெய்தது. க்ளவுட் பஸ்டர்ஸ் எனச் சொல்லப்படும் அதி கனமழை திடீரென பெய்யக் காரணம் என்ன?

வறண்ட காற்றும், ஈரப்பதமான காற்றும் மோதும்போது, இதுபோன்ற கனமழை பெய்யக்கூடும். சில நேரங்களில் சரியாக அமைந்தால் நல்ல மழை கிடைக்கும். இல்லாவிட்டால் மழை இருக்காது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் பகுதியில் மட்டும் 8 மணி நேரங்களில் மட்டும் 288 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட அதிகமான மழை.

இந்த முறை வடகிழக்குப் பருவமழையில் எம்ஜேஓவின் தாக்கம் இருக்குமா? அதனால் மழை கிடைக்குமா?

நிச்சயமாக, எம்ஜேஓ காரணியால்தான் நவம்பர் 2-வது வாரத்திலிருந்து மழை பெய்யப் போகிறது. டிசம்பர் 2-வது வாரம்வரை இந்த எம்ஜேஓ காரணியால் நமக்கு நல்ல மழை கிடைக்கும்.

திருச்சி, பெரம்பலூர், விழுப்பும் உள்ளிட்ட உள்மாவட்டங்களுக்கு எப்போது மழை கிடைக்கும்?

கிழக்கிலிருந்து வீசும் காற்றால் நவம்பர் 4-ம் தேதியிலிருந்து பெய்யும் மழை கடலோர மாவட்டங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். ஒருவேளை ஏதாவது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா பகுதியிலோ அல்லது வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியோ ஏற்பட்டால், மத்திய மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதற்காக உள்மாவட்டங்களுக்கு மழையே கிடையாது என்று சொல்வதற்கில்லை. வெப்பச் சலனத்தால் அடுத்துவரும் நாட்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x