

வருவாய் கணக்கில் ‘பி-கிரேடு’ அந்தஸ்துக்கு உயர்ந்தாலும், அடிப்படை வசதிகளில் ‘டி-கிரேடு’ அந்தஸ்திலேயே வாணியம்பாடி ரயில் நிலையம் இருப்பதாக ரயில் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம் பாடியில் கடந்த 1861-ம் ஆண்டு ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைந்த வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தினந்தோறும் 30 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன.
அதேநேரத்தில் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் ஆண்டு வருவாய் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் ஆனாலும், அடிப்படை வசதி களில் இன்னும் டி-கிரேடிலேயே இருப்பதாக பயணிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இது குறித்து, வாணியம்பாடி ரயில் பயன்படுத்துவோர் சங்கத் தின் பொதுச்செயலாளர் இக்பால் அகமது கூறும்போது, ‘‘வாணியம் பாடி தாலுகாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலை கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், நூற்றுக்கும் மேற் பட்ட காலணி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
டிக்கெட் மற்றும் இதர வருவாய் மூலம் ரயில்வே துறைக்கு வாணியம்பாடியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வசூல் ஆகிறது. ஆனால், அடிப்படை வசதி கள் ஏதும் செய்யப்படவில்லை. குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் துருப்பிடித் துள்ளன. பயணிகளுக்கு பொது கழிப்பறை வசதி கிடையாது. இது தவிர கேன்டீன், தகவல் பலகை, கூடுதல் கவுன்ட்டர், நடைமேடை நிழற்குடை, இருக்கை வசதி, பயணி கள் ஓய்வறை, குப்பைத் தொட்டி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைக் கேட்டு பல முறை மனு கொடுத்தும் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வரும் நகரமாக வாணியம்பாடி மாறி வருவதால், பல்வேறு தொழில் வளர்ச்சிக்காக, இங்கிருப்பவர்கள் வெளிமாநிலத்துக்கும், வெளிமாநிலத்தில் உள்ள நிறைய பேர் வாணியம்பாடிக்கும் வந்து செல்கின்றனர் இதனால், கோவை எக்ஸ்பிரஸ், டபுள்டக்கர், லால்பாக், மும்பை - கன்னியாகுமரி, திருப்பதி - பெங்களூரு, காவேரி எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இங்கு நின்று செல்ல வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்’’ என்றார்.
இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அடிப்படை வசதிகள் மற்றும் ரயில்கள் நிற்பது குறித்து ஆய்வுக்கு வந்த தென்னக ரயில்வே மேலாளரிடம் கூறியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என அவர் கூறியுள்ளார். உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்’’ என்றார்.