

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேசிய ஒற்றுமை நாள் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று (அக். 31) நடைபெற்ற நிகழ்வில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், கே.ஏ.யு.அசானா, கீதா ஆனந்தன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், காவல் துறையினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நலவழித்துறை ஊழியர்கள், காவல் துறையினர், நகராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர்.