Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மழைநீரை சேமிக்க 200 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட வழிகள்: கோயில் குளங்கள் சீரமைப்பில் கவனம் செலுத்தும் மாநகராட்சி

தெப்பக் குளத்துக்கு மழைநீர் வரும் வழிகள் குறித்த வரைபடம்.

சென்னை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில்மழைநீரை சேமிக்க 200 ஆண்டுகளுக்குமுன்பே 4 பகுதிகளில் வழிகள் அமைத்து,பருவமழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமித்தல் மற்றும் செறிவூட்டல் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம்ஏந்திய ஈசுவரர், கபாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். 17-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி எனும் பெயர் பெற்ற தலம் இது.ராமபிரான் நேசித்துத் தங்கியிருந்து பூஜித்துதிருவிழா நடத்திய தலமாகவும், திருஞானசம்பந்தப் பெருமான், எலும்பைப் பூம்பாவையாக்கிய தலமாகவும், 63 நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலமாகவும், 12 ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலமாகவும், ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. ஈசனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257-வது தேவாரத் தலமாகும்.

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு

இக்கோயிலுக்கு கர்நாடக நவாப் முகமது அலி தானமாக வழங்கிய நிலத்தில்தான் 18-ம்நூற்றாண்டு வாக்கில் குளம் அமைக்கப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள், தங்கள்பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இக்குளம் கபாலி தீர்த்தம் எனஅழைக்கப்படுகிறது. இந்தக் குளம் 7.52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 197 மீ. நீளம், 150 மீ. அகலம், 5.10 மீ. ஆழம் கொண்டது. இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி தினத்திலிருந்து 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

மழைக் காலங்களில் கிடைக்கும் நீரைசேமிப்பதிலும், நிலத்துக்கடியில் செறிவூட்டுவதிலும் தமிழர்கள் உலகுக்கே முன்னோடிகளாக இருந்துள்ளனர். அதனாலேயே தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களின் அருகில் குளங்களை அமைத்து, அப்பகுதியைச் சுற்றி பெய்யும் மழைநீரை சேமித்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே கபாலீஸ்வரர் கோயில் அருகில் இந்த கபாலிதீர்த்தமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தை அமைக்கும்போதே, தென்மேற்கு,வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய4 மூலைகளிலும் மழைநீரை குளத்துக்குள்கொண்டுவந்து சேமிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கோயில் வளாகத்தில் பெய்யும் மழைநீரும் குளத்துக்குள் செல்லஇரு வழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியின் செறிவூட்டும் பணி

இதற்கிடையே மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோயில் குளங்களில் மழைநீரை செறிவூட்டும் பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துவருகிறது. கபாலி தீர்த்தக் குளத்திலும் மழைநீரை செறிவூட்டும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

முதற்கட்டமாக இக்கோயில் குளத்துக்கு கழிவுநீர் கலந்த மழைநீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. பழைய அமைப்பின்படி 4 மாடவீதிகளில் மற்றும் கோயில் வளாகத்தில் பெய்யும் மழைநீர், குளத்துக்குச் செல்ல 6 வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி சார்பில் அருகில் உள்ள குடியிருப்புகளின் மாடியில் இருந்து வெளியேறும் தூய மழைநீரை, ஏற்கெனவே உள்ள 4 வழிகள் வழியாக குளத்துக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மாடவீதி பகுதியிலும் மழைநீரைக் கொண்டுவர 2 வழிகளை மாநகராட்சி அமைத்திருந்தது. அது பயன்பாடற்று கிடந்த நிலையில், அதையும் தற்போது சீரமைத்து, மழைநீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் இக்கோயில் குளத்தில்அதிக அளவில் தூய மழைநீரை செறிவூட்ட முடிகிறது.

நகர்மயத்தால் அப்பகுதியில் கான்கிரீட்கட்டுமானங்கள் ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இக்குளம், இப்பகுதியைச் சுற்றியுள்ளபல்வேறு குடியிருப்புகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மயிலாப்பூர் பகுதியில் கடந்த 29-ம் தேதி ஒரேநாளில் 18 செமீ மழைபெய்த நிலையில், மாநகராட்சி நடவடிக்கைகாரணமாக, இக்குளத்தில் 1 மீட்டர் உயரத் துக்கு நீர் நிறைந்துள்ளது. இதேபோன்று 5 நாள் மழை பெய்தால், குளம் நிரம்பிவிடும்.

ரூ.2 கோடியில் தூர்வாரும் பணிகள்

இதுமட்டுமல்லாது, ஸ்மார்ட் சிட்டி நிதியில்ரூ.2 கோடியே 20 லட்சத்தில் சென்னையில் உள்ள 17 கோயில் குளங்களில் தூர்வாரி, சீரமைத்து, அவற்றின் நீர் கொள்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்துமழைநீரை கொண்டுவருவதற்கான வழிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால்தற்போதைய கனமழையில் கிடைத்த நீர்,நேரடியாக குளங்களில் செறிவூட்டப்பட்டுள்ளன.

மேலும் மயிலாப்பூரில் உள்ள சித்ரகுளம் மற்றும் வடபழனி முருகன் கோயில் குளம் ஆகியவற்றில் மழைநீரை செறிவூட்ட ஜெர்மன் தொழில்நுட்பத்தில் குளத்தைச் சுற்றி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தக் குளங்களில் ஒருநாள் மழைக்கே அதிக அளவில் நீர்மட்டம் உயர்ந் துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x