Last Updated : 31 Oct, 2015 01:04 PM

 

Published : 31 Oct 2015 01:04 PM
Last Updated : 31 Oct 2015 01:04 PM

இரவுக் காவலர்கள் இல்லாததால் பதிவுத் துறை அலுவலகங்களில் பாதுகாப்பு கேள்விக்குறி

தமிழ்நாட்டில் உள்ள பதிவுத் துறை அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அங்குள்ள அரசு மற்றும் பொதுமக்களின் பதிவு ஆவணங்கள், கணினிப் பதிவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், 50 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், 3 முகாம் அலுவலகங்கள், 9 துணைப் பதிவுத் துறைத் தலைவர் அலுவலகங்கள், ஒரு பதிவுத் துறை அலுவலகம் என மொத்தம் 638 பதிவுத் துறை அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் என மொத்தம் 625 அலுவலகங்களில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் இரவுக் காவலர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

இதனால், முக்கியத்துவம் வாய்ந்த பதிவு ஆவணங்கள், கணினிகள் மற்றும் அலுவலகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள் ளது என்றும், பதிவுத் துறை அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவருமான கே.கணேசன் கூறியது:

அரசுக்கு நிதியைப் பெற்றுத் தருவதில் பிரதான இடம் வகிக்கும் பதிவுத் துறையில் அனைத்து நிலையிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து பதிவுத் துறைத் தலைவர் மற்றும் அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அலுவலக உதவியாளர்கள் கடும் பணிச்சுமையால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதேபோல், பதிவு மேற்கொள்ளப்படும் 625 அலுவல கங்களில் 316 அலுவலகங்களுக்கு மட்டுமே இரவுக் காவலர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது சுமார் 300 அலுவல கங்களில் இரவுக் காவலர் கிடையாது. 600-க்கும் அதிகமான அலுவலகங்களில் இரவுக் காவலர் இல்லை.

இதனால், இரவுக் காவலர் பணியையும் சேர்த்து கவனிக்குமாறு அலுவலக உதவியாளர்களை உயர் அலுவலர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஏற்கெனவே பணிச்சுமையால் அவதிப்பட்டுவரும் அலுவலக உதவியாளர்கள், மேலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அலுவலகத்துக்குள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நேரிட்டு, அதனால் ஏராளமான பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரவுக் காவலர்கள் இல்லாததால், பதிவு அலுவலகங் களில் வைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் பொதுமக்களின் ஆவணங் கள், கணினி ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை விரைவாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சென்னை சேப்பாக்கம் எழிலக தீ விபத்து முன்னுதாரணமாக உள்ள நிலையில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள பதிவு அலுவலகங்களுக்கு உடனடியாக இரவு நேரக் காவலாளிகளை நியமிக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x