

தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ம் தேதி (சனிக்கிழமை) வருகிறது.எனவே, மக்கள் சொந்த ஊர்களுக்கு நவ.12, 13-ம் தேதிகளில் பயணம் செய்ய ரயில், பேருந்துகளில் டிக்கெட்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை,நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு, படுகை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும்வசதி உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்குவதால், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா அச்சம் காரணமாக வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், முன்பதிவு மந்தமாக இருக்கிறது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருவதை கடந்த ஆயுதபூஜையின்போதே பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டில் இதில், 50 சதவீத பேருந்துகளையாவது இயக்க முடிவு செய்து, தயாராகிவருகிறோம். ஆனால், டிக்கெட்முன்பதிவு மந்தமாக இருக்கிறது.
கடந்த ஆண்டில் தீபாவளி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே சென்னையில் இருந்து பயணம் செய்ய சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் முன்பதிவாகி இருந்தது.
ஆனால், தற்போது சுமார் 9 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவாகி உள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.