மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை முடிவுக்கு கிரண்பேடி ஒப்புதல் தருவாரா?

மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை முடிவுக்கு கிரண்பேடி ஒப்புதல் தருவாரா?
Updated on
1 min read

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு தருவது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீட் தேர்வால் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நீட் தேர்வை ரத்து செய்ய புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு நீட் தேர்வு தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளது.

இச்சூழலில், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி படிக்க வசதியாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றியுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 26-ம் தேதி புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், ‘அரசு பள்ளி மாணவர் களுக்கு மருத்துவக்கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்தால்தான் 10 சத இடஒதுக்கீடு தரும் கோப்பு மத்திய அரசுக்கு செல்லும், அதன்பிறகு மத்திய அரசு சட்டமாக்க ஒப்புதல் தரும். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டியோ, அவசர சட்டமாகவோ இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும்.

புதுச்சேரியில் ஏற்கெனவே ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையில் கடும் மோதல் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் அமைச் சரவையின் முடிவுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையி்ல் சிறப்பு ஒதுக்கீட்டை அனுமதித்து உத்தரவிட வலியுறுத்தி ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தந்தால்தான் நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தருவாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது.

"ஆளுநர் கிரண்பேடியின் முடிவு இன்று (அக். 31) இரவுக்குள் தெரிய வாய்ப்புள்ளது" என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in