மெட்ரோ ரயில் பணிக்காக சென்ட்ரல் எதிரே 2 ஓட்டல்களை இடிக்கும் பணி தீவிரம்: பஸ் நிலையம், பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்க திட்டம்

மெட்ரோ ரயில் பணிக்காக சென்ட்ரல் எதிரே 2 ஓட்டல்களை இடிக்கும் பணி தீவிரம்: பஸ் நிலையம், பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்க திட்டம்
Updated on
2 min read

சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள சென்ட்ரல் டவர், அவுரா ஓட்டல் ஆகிய 2 ஓட்டல்களை இடிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

இம்மாத இறுதிக்குள் இப்பணியை முடித்து, சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பஸ் நிலையம், 3 அடுக்கு பார்க்கிங், விமான பயணத்துக்கான “போர்டிங் பாஸ்” வழங்கும் நவீன வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்கப் பாதை, பறக்கும் பாதை அமைக்கப் படுகிறது.

முதல் வழித்தடம் சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி சென்ட்ரல், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை செல்கிறது. இரண்டாவது வழித் தடம், சென்னை சென்ட்ரலில் தொடங்கி எழும்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை செல்கிறது.

மெட்ரோ ரயிலின் இரு வழித்தடங்களும் சென்னை சென்ட்ரலில் சந்திப்பதால் இங்கு பிரம்மாண்டமான சுரங்க ரயில் நிலையம் கட்டப்படுகிறது. இப்பணிக் காக சென்ட்ரல் டவர் ஓட்டல், அவுரா ஓட்டல் உள்ள பகுதிகளை கையகப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இருந்தாலும், ஓட்டல்களில் உள்ள தங்களது பொருட்களை அப்புறப்படுத்த ஒரு மாதகாலம் அவகாசம் வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்தினர் கேட்டனர். அதன் காரணமாக

வும், மக்களவைத் தேர்தல் காரண மாகவும் ஓட்டல் களை இடிக்கும் பணி தள்ளி வைக்கப்பட்டது. பொருட்களை அப்புறப்படுத்துவ தற்கான கால அவகாசம் இம்மாதம் 17-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து 6 முதல் 8 மாடிகளைக் கொண்ட ஓட்டல் களை இடிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு ஓட்டலுக்குள் இருக்கும் ஏ.சி. மிஷின்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, ஓட்டல்களை இடிக்கும் பணியைத் துரிதப்படுத் தியுள்ளோம். இம்மாத இறுதிக்குள் இப்பணியை முடித்து மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங் கத் திட்டமிட்டுள்ளோம்.

ஓட்டலுக்கு ஒரு பக்கம் போக்கு வரத்து நிறைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையும், மற்றொரு பக்கம் ரயில் தண்டவாளமும் இருப்பதால் கட்டிட இடிபாடுகள் சாலையிலோ ரயில் தண்ட வாளத்திலோ விழுந்துவிடக் கூடாது என்பதால் இடிக்கும் பணியை கவனமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.

ஓட்டல்களை இடித்தபிறகு சுமார் 30 ஆயிரம் சதுர அடி இடம் கிடைக்கும். அதைக் கையகப் படுத்தியதும் தரைப் பகுதியில் பஸ் நிலையம் கட்டப்படும். தரைக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு போய் வருவதற்கான பாதைகள், சுரங்கப் பாதைக்கான காற்றோட்டக் கருவிகள் வைக்கும் இடம், 3 தளங்களில் கார், டூவீலர் பார்க்கிங் ஆகியவை கட்டப்படும்.டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் அமர்வதற்கான இடமும், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான இடவசதியும் தனியே செய்து தரப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சென்ட்ரலில் இருந்து மெட்ரோ ரயிலில் ஏறி விமான நிலையம் போய் அங்கிருந்து விமானத்தில் செல்ல விரும்புபவர்கள், மெட்ரோ ரயிலில் பெரிய பெட்டிகளை எடுத்துக் கொண்டு போக முடியாது. அதனால், விமானத்தில் செல்பவர்களின் பெரிய பெட்டிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதித்துப் பார்த்து இங்கேயே “போர்டிங் பாஸ்” தரும் சிறப்பு வசதியும் செய்து தரப்படவுள்ளது. சோதனைக்குப் பிறகு பயணிகளின் பெரிய பெட்டிகள் தனி வாகனத்தில் விமான நிலையம் எடுத்துச் செல்லப் படும். இத்தகைய நவீன வசதிகள் புதுடெல்லியிலும், வெளிநாடு களிலும் உள்ளன.

இதுதவிர, தரைக்கு அடியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் காம்ப்ளக் ஸில் உள்ள புறநகர் ரயில் நிலையம், இரண்டு மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்குச் செல்வதற்கான பாதைகளும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in