

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி ஆளுநரை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு பல விமர்சனங்கள், போராட்டங்கள், உயர் நீதிமன்ற விமர்சனம் உள்ளிட்டவை எழுந்தன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர, 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கலந்தாய்வு தள்ளிப்போனது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் எழுதி, 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுகோள் விடுத்தார். பாஜக தலைவர் முருகன் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் ஆளுநருக்கு வேண்டுகோள் வைத்தனர். திமுக, இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின.
ஆனாலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் இன்றி, 7.5% உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இன்று ஆளுநர் உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவித்தார்.
7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்துக் கேட்டுக் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு நேற்றுதான் பதில் வந்தது என்றும், இதையடுத்து ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை ஆளுநரை நேரில் சந்தித்தார்.
45 நிமிடம் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.