Published : 06 Oct 2015 07:38 AM
Last Updated : 06 Oct 2015 07:38 AM

‘மாதொருபாகன்’ நாவலுக்கு விருது: இந்திய மொழித் திருவிழாவில் வழங்கப்படுகிறது

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு இந்திய மொழித் திருவிழாவை ஒட்டி வழங்கப்படும் ‘சமன்வய் பாஷா சம்மான்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

1980-களில் சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். அவரது முதல் நாவலான ‘ஏறுவெயில்’ பலரது கவனத்தை ஈர்த்தது. கூளமாதாரி, நிழல் முற்றம், மாதொருபாகன் உள்ளிட்ட 9 நாவல்களை எழுதியுள்ளார். அத்துடன் 4 சிறு கதைத் தொகுப்புகளும் 8 கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இவரது நாவலான ‘மாதொரு பாகன்’ 2010-ல் வெளிவந்தது. அதன் ஆங்கில மொழியாக்கம் 2013-ம் ஆண்டு வெளியானது. இந்த நாவல் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் ஏற்பட்ட நெருக் கடியால் எழுதுவதை நிறுத்திக் கொள்வதாக பெருமாள் முருகன் அறிவித்திருந்தார். அது தமிழக, இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது நியூயார்க் டைம்சின் தலையங்கமாக ஆனதும் குறிப்பிடத்தக்கது.

பெருமாள் முருகன் கருத்து

இந்நிலையில், இந்திய மொழித் திருவிழாவையொட்டி ‘மாதொருபாகன்’ நாவலுக்கு ‘சமன்வய் பாஷா சம்மான்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விருது கிடைத்திருப்பது தமிழுக்கான அங்கீகாரம். துரதிருஷ்டமான ஒரு தருணத்தில் என்னுடைய மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது’’ என பெருமாள் முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

நவம்பரில் விழா

நவம்பரில் நடக்கவுள்ள இந்திய மொழித் திருவிழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. மலையாளக் கவி கே.சச்சிதா னந்தன், சச்சின் கேத்கர், மங்கலேஷ் தப்ரல், மித்ரா புகன் அருந்ததி சுப்ரமண்யம் ஆகியோரைக் கொண்ட குழு, பெருமாள் முருகனின் மாதொருபாகனை விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x