Published : 30 Oct 2020 02:51 PM
Last Updated : 30 Oct 2020 02:51 PM

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; மக்கள் சக்தி வென்றது: கி.வீரமணி, விஜயகாந்த், ஜி.கே.வாசன் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக்.29) பிறப்பித்தது. இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவசரநிலை கருதி தமிழக அரசு தனக்கான நிர்வாக அதிகாரத்தின்கீழ் கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை வெளியிட்டது.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இன்று (அக். 30) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடம் அளிப்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கிட்டத்தட்ட 45 நாள்கள் ஆளுநர் இழுத்தடித்தார்.

கி.வீரமணி: கோப்புப்படம்

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாகவும், எதிர்க்கட்சிகள் ஒருமனதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையாலும், ஆளும் அரசு நேற்று பிறப்பித்த அரசாணை காரணமாகவும் வேறு வழியின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மக்கள் சக்தி வென்றது! காலதாமதம் செய்தாலும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறோம்!

விஜயகாந்த், தலைவர், தேமுதிக

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இந்நிலையில், தமிழக அரசின் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டே மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதை மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறோம்.

விஜயகாந்த்: கோப்புப்படம்

மேலும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்த அரசாங்கத்துக்கும், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கும் வாழ்த்துகளையும், வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

அரசுப் பள்ளி மாணவர்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் நீட் தேர்வின் வெற்றியின் அடிப்படையில் அவர்கள் மருத்துவர் கனவை நனவாக்கக்கூடிய மிக முக்கியமான 7.5% உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமாகா நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

அதே நேரத்தில் இந்த மசோதாவைச் சட்டப்பேரவையில் கொண்டு வந்து வெற்றிகரமாக நிறைவேற்றிய, ஆளுகின்ற அதிமுக அரசுக்கு தமாகா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன் அடிப்படையில் பெற்றோர்கள், மாணவர்களுடைய எதிர்பார்ப்பும், எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய தமாகாவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x