Published : 30 Oct 2020 02:44 PM
Last Updated : 30 Oct 2020 02:44 PM

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம்: முத்தரசன் விமர்சனம்

ஆளுநர் 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயல் என்று இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாடு அரசு கடந்த செப்.15-ம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய “தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கும் சட்ட முன்வடிவு 2020” (7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம்) ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது உடனடியாக முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதன் மூலம் ஆளுநர், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சமூகத்திலும் அவசியமற்ற பதற்றத்தை உருவாக்கியதை ஏற்க இயலாது.

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி செயல்படும் ஆளுநர், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்பட வேண்டியவர். ஆனால், பாஜக மத்திய அரசு ஆளுநர் மாளிகையினைத் தனது அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் அதிகார அத்துமீறல்களின் ‘கருவியாக’ செயல்படுவதால் இதுபோன்ற தவறுகள் தொடர்கின்றன.

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிமுறையில் மாநில அமைச்சரவையும், சட்டப்பேரவையும் கூடுதல் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கத் தவறிய ஆளுநர் 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயலாகும்.

இந்தக் காலதாமதத்தை நியாயப்படுத்த ‘சட்ட ஆலோசனை’ என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இதில் கிடைக்கும் படிப்பினையை ஆளுநர் உணர்ந்துகொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x