‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின் முன் திரளும் ரசிகர்கள்: சென்னையில் ஒட்டப்பட்டுள்ள ஆதரவு போஸ்டர் 

‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின் முன் திரளும் ரசிகர்கள்: சென்னையில் ஒட்டப்பட்டுள்ள ஆதரவு போஸ்டர் 
Updated on
3 min read

தனது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்த ஆலோசனை காரணமாக, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினி அறிவித்தார். இதனையடுத்து, 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல' என ரஜினி ஆதரவு போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளன. ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் திமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். பின்னர் 1998 மக்களவைத் தேர்தலில் வாய்ஸ் கொடுத்தார். அதன் பின்னர் அவர் அரசியலில் ஈடுபாடு காண்பிக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும் சம தூரத்தில் நட்பைப் பேணி வந்தார்.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் அரசியல் ஓய்வால் 2017-ல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன், எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன். 2021 தேர்தலில் நேரடியாகக் களம் இறங்குவேன் என ரஜினி அறிவித்தார்.

ரசிகர்கள் கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. கட்சி பெயர், நிர்வாகிகள், கொள்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியின் பெயரை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரியில் பேசிய ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பேன், எனக்கு முதல்வர் ஆசை இல்லை, ஒருவரைக் கைகாட்டுவேன் என்று பேசினார்.

ரசிகர்களுக்கு ஆசை காட்டி பணம் செலவழிக்க வைக்க தனக்கு எண்ணமில்லை என்றார். ''இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். மக்கள் மன்றத்தினர் மக்களிடம் சென்று நம் எண்ணத்தைச் சேருங்கள். மக்களிடம் ஒரு மாற்றம் எழுச்சி ஏற்பட வேண்டும். அது நாடு முழுவதும் பரவ வேண்டும். அப்போது நான் வருவேன்'' என்று ரஜினி பேசினார்.

ஆனால், மார்ச் மாதம் கரோனா பரவியதால் ஊரடங்கு அமலானது. கரோனாவின் தீவிரத்தால் உலகமே முடங்கியது. 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. 6 மாதம் பொதுவெளியில் வராமல், சினிமா துறையில் படப்பிடிப்பு ஆரம்பித்த பின்னும் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் தேர்தல் ஜுரம் சூடுபிடிக்கும் நிலையில், ரஜினியின் அறிவிப்பு எதுவும் வராத நிலையில், ரஜினி எழுதியது போன்று ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவியது.

அதில், “கரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், 'கரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும்.

இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்குச் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம்.

அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்’.

அரசியலுக்கு வருவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்'' என்று ரஜினி தெரிவித்ததாக ஒரு கடிதம் வைரலானது.

நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் கட்சி தொடங்க வேண்டுமென்றால் டிசம்பரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொருள்படும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து ரஜினி நேற்று ஒரு மறுப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

“அது தனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் மருத்துவர்கள் ஆலோசனை குறித்த தகவல் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்” எனத் தெரித்திருந்தார்.

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிடலாம் என்கிற கருத்து வெளியானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று சென்னை முழுவதும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'நீங்க வாங்க ரஜினி. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான். ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'இப்ப இல்லன்னா எப்போதும் இல்ல' என்கிற ரஜினியின் வாசகத்தை டி ஷர்ட்டில் பொறித்தபடி சென்னை மத்திய மாவட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினியின் போயஸ் இல்லம் முன் திரண்டனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமெனக் கோஷமிட்டனர்.

''ரஜினி சொன்ன ‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’ என்கிற வாசகத்தை டி ஷர்ட்டில் பொறித்து அதையே அணிந்து 120 நாட்களுக்கு மேல் மக்கள் முன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ரஜினி வந்தால் மட்டுமே மாற்றம் வரும். அவர் அரசியலுக்கு வராவிட்டால் அவர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்போம்'' என அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரளும் நிகழ்வு தொடங்கியுள்ளது. இதேபோன்ற போஸ்டர்கள் பிற மாவட்டங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in