ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்துள்ளார்; அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்: திருமாவளவன் பேட்டி

ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்துள்ளார்; அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்: திருமாவளவன் பேட்டி
Updated on
2 min read

தமிழகத்தில் சாதி, மதவெறியைத் தூண்ட வேல் யாத்திரை மூலம் பாஜக முயல்வதாகவும், எம்ஜிஆர் படத்தை அவர்கள் பயன்படுத்துவதை அதிமுக, இபிஎஸ், ஓபிஎஸ் அனுமதிக்கக்கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் வரும் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த உள்ளதைத் தடை செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“வேல் யாத்திரை மூலம் சாதி, மத வெறியைத் தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் முயற்சி செய்கின்றன. நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, வைரமுத்து உள்ளிட்டவர்கள் இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டதாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் பாஜகவினர்.

நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்திய எச்.ராஜா, பெண்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் மீது பல தரப்புகளில் இருந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பாஜகவினர் இணைய வழியில் புகார் அளித்தவுடன் வழக்குப் பதிவு செய்கிறது.

மனு தர்மத்தை பெரியார் எதற்காக எதிர்த்தார் என்பது குறித்து இணையவழிக் கருத்தரங்கில் 40 நிமிடங்கள் நான் பேசிய காணொலியைத் தவறாகப் பரப்புகிறார்கள். அது என்னுடைய தனிப்படட கருத்து அல்ல. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வட மாநிலங்களில் எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அதேபோல தமிழகத்தில் இந்த உத்தியைக் கையாளுகிறார்கள்.

சாதிவெறியைத் தூண்டும் அசுவத்தாமன், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய எனது பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி, மத வெறியாளர்களுக்கு இடமில்லை என்று அறிவித்த அதிமுகவின் நிறுவனர், மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தனது போஸ்டரில் பாஜக பயன்படுத்துவதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.

அதிமுகவும், முதல்வரும், துணை முதல்வரும் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. திமுக கூட்டணியில் ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். அரசியலுக்காக சாதிவெறி, மதவெறி கொண்டவர்களை அனுமதித்தால் அது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு இழைக்கும் துரோகம் என முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசின் முடிவை வரவேற்கிறேன். அதே நேரம் நீதிபதி கலையரசன் அறிக்கையின் படி 10 சதவீதமாக அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும்.

நடிகர் ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும், வளத்தோடும் ரஜினி இருக்க வேண்டும்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in