

காவல்துறை உடல் தகுதித் தேர்வு நடத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரால் அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அது தொடர்பான கோப்புகளைத் தலைமைச் செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணிகளுக்குக் கடந்த 2018-ல் விண்ணப்பம் பெறப்பட்டு, பலவித காரணங்களால் போலீஸ் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. பலதரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் இளையோர் தவிக்கும் சூழல் நிலவியது.
இந்நிலையில், வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் உடல் தகுதித் தேர்வுகள் தொடங்க உள்ள சூழலில், அதில் உடல் தகுதித் தேர்வு நடக்கும் முறையில் பலவித சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், இன்று (அக். 30) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமைச் செயலாளருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம்:
"தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மூலம் மின்னனு சாதனப் பட்டை அணிவித்து கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு ஓட்டத் தேர்வுகள் நடத்தாமல் உடல் தகுதித் தேர்வுகள் மனிதக் கண்காணிப்பில் 'விசில்' முறையில் நடத்தப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. அதேபோல், இதர பிராந்தியங்களில் உடல் தகுதித் தேர்வு நடத்த தனியாக 400 மீ. டிராக் இல்லை என்றும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
ஆட்சேர்ப்பு செயல்முறை நியாயமான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட விதிகளுடனும் அரசின் நிலையான உத்தரவுகளின்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வழிவகுக்கும்.
இப்பிரச்சினைகள் குறித்து தகுதிவாய்ந்த அதிகாரத்தால் முடிவுகள் எடுக்கப்படும் வரை ஆட்சேர்ப்பு செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
அதனால், சம்பந்தப்பட்ட கோப்புகளை உடனடியாக என்னிடம் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்".
இவ்வாறு அந்த உத்தரவில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதன் நகலை டிஜிபிக்கும் அளித்துள்ளார்.