

மதுரை நாட்டுப்புறக் கலைகள் தொடர்பாக, ‘தி இந்து’தமிழ் நாளிதழில் வெளி யான கட்டுரையை அடிப்படையாக வைத்து வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகள், கலைஞர் கள் பாதுகாப்புக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, இனிமேல் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
மதுரை உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் எம்.வெயில்கனிராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
‘தி இந்து’தமிழ் நாளிதழ் நடுப் பக்கத்தில் நேற்று (அக். 16) ‘திரு விழா ஜோராக நடக்கிறது, சாமி தான் அனாதை ஆயிடுச்சு’என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகி யுள்ளது. அதில் தமிழகத்தில் மயி லாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய நடனங் கள் இருந்துள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த கலை கள் வளமையாக இருந்துள்ளன.
தற்போது நாட்டுப்புறக் கலைஞர் கள் வறுமையில் வாடுகின்றனர். இவர்களது எண்ணிக்கை வெகு வாக குறைந்து வருகிறது. இதற்கு நாட்டுப்புறக் கலைகளையும், கலை ஞர்களையும் அரசு கண்டுகொள்ளா மல் இருப்பதும் ஒரு காரணம்.
நமது முன்னோர்களின் உண்மை யான நாடித்துடிப்புதான் நாட்டுப் புறக் கலைகள். இக்கலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, நாட்டுப்புறக் கலைகள் உட்பட நமது கலாச்சார பாரம் பரியத்தை பாதுகாக்கவும், நாட் டுப்புறக் கலைஞர்களை பாதுகாக் கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசார ணைக்குப்பின் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழகம் நாட்டுப்புற கலைகளின் உயர்ந்த பாரம்பரியம் கொண்ட மாநிலம். சங்க காலத்தில் இருந்து தமிழர்கள் இயல், இசை, நாடகக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தில்கூட மாதவி 11 விதமாக கூத்தாடியதாக கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் மோகினி யாட்டம், குதிரையாட்டம், தப்பாட் டம், கரகாட்டம் உட்பட 100-க்கும் மேற்பட்ட கலைகள் உள்ளன. இக் கலைகளை புதிய தலைமுறையின ருக்கு முதியவர்களால் சொல்லப் படவில்லை. இதனால் இக்கலை கள் மெல்ல மெல்ல அழிந்து வரு கின்றன.
இதுதொடர்பாக `தி இந்து’ தமிழ் நாளிதழில் கட்டுரை வெளியாகி யுள்ளது. இதில் நாட்டுப்புறக் கலை ஞர்களை அரசு கண்டுகொள்ள வில்லை எனக் குறிப்பிடப்பட்டுள் ளது. அதன் அடிப்படையில் வழக் கறிஞர்கள் சங்கத்தினர் இந்த பொது நலன் மனுவை தாக்கல் செய்துள் ளனர். இதற்காக வழக்கறிஞர்களை பாராட்டுகிறோம். இந்த மனு உண் மையிலயே பொதுநலன் சார்ந்த மனு ஆகும். இதனால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.
நாட்டுப்புறக் கலைஞர்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக் கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், `தி இந்து’ கட்டுரையை படிக்கும் போது நாட்டுப்புறக் கலைஞர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறது. பழங்கால பொருள்களை பாதுகாப்பது போல், பழமையான நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்க வேண்டும்.
மனுதாரர் நாட்டுப்புறக் கலைகள் நாகரீகத்தின் அடையாளம் என சரியாக கூறியுள்ளார். இந்த கலைகள் மூலம் மக்களின் மனதை அறிந்துகொள்ள முடியும்.
எனவே, தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள், வருங்காலத்தில் நாட்டுப் புற கலைகள், கலைஞர்களை பாதுகாக்கும் திட்டம் தொடர்பாக அரசு சுற்றுலாத் துறை முதன்மை செயலர் வரும் 29-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதி நாகமுத்து வேதனை
விசாரணையின்போது நேற்றைய `தி இந்து’ தமிழ் நாளிதழை படித்த நீதிபதி நாகமுத்து, நடுப்பக்கத்தில் வெளியான நாட்டுப்புற கலைகள் தொடர்பான கட்டுரையை சுட்டிகாட்டினார். ‘கட்டுரையில் கரகாட்டக் கலைஞர் காமாட்சிதேவி, கோயிலில் ஆடுவதற்கு ஒரு ஆட்டமும், பொது இடங்களில் ஆடுவதற்கு ஒரு ஆட்டமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொழிலுக்கு வரக்கூடாது என வாரிசுகளிடம் அவர் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது’ என்றார்.