

சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நேற்றுடன் தென்மேற்கு பருவமழை விடை பெற்றது. நேற்று காலை நிலவரப் படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. புதுக் கோட்டை மாவட்டத்தில் அதிக பட்சமாக 7 செ.மீ., தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரி, நெல்லையில் 5, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கடலூரில் 4 செ.மீ. மழை பதிவானது.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதர பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்படி?
அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் மழைப் பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பயன்பெறும். தமிழகம் 48 சதவீத மழையை இக்காலகட்டத்தில் பெறுகிறது.
இந்தாண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழை, ஆண்டு இயல்பான 33 சென்டி மீட்டரை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழகம் இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. மழையை பெறும். ஆனால், இந்தாண்டு மழைப்பொழிவு 12 சதவீதம் அதிகரிக்கும்.