

சென்னையில் துவரம் பருப்பு விலை இதுவரை இல்லாத அள வுக்கு கிலோ ரூ.170 ஆக உயர்ந் துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் பருப்பு கொள்முதல் செய்வதை தடுத்தால்தான் விலையை கட்டுப் படுத்த முடியும் என்கின்றனர் மளிகை வியாபாரிகள். தினமும் பருப்பு சாம்பார் வைப்பது கட்டு படியாகாமல் காரக்குழம்புக்கு மாறிவிட்டனர் இல்லத்தரசிகள்.
சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, இட்லி, தோசை, பொங்கல் என பெரும்பாலும் பருப்பு வகைகளையே நம்பியிருக்கிறது தமிழக சமையல். இதில் முக்கியமான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலை இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ ரூ.170 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:
பருப்புகளைப் பொருத்தவரை வட மாநிலங் களையே நம்பியிருக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் நாம் கடந்த ஆண்டு பருப்பு விளைச்சல் குறைவு.
இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பருப்புகளின் விலை அதிகரித்து வந்தது. கடந்த மாத நிலவரப்படி துவரம் பருப்பு ரூ.160, உளுத்தம்பருப்பு ரூ.150-க்கு விற்கப்பட்டது. தற்போது துவரம் பருப்பு ரூ.170, உளுத்தம்பருப்பு ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இவற்றின் விலை ரூ.90 மட்டுமே. இந்த அளவுக்கு பருப்புகள் விலை உயர்ந்திருப்பது இதுவே முதல் முறை.
நிலைமையை சமாளிக்க, தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துவரம் பருப்பும், மியான்மரில் இருந்து உளுத்தம் பருப்பும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய பருப்புகளைவிட இவற்றில் சுவை குறைவு. அதனால் இந்திய பருப்புகளை விட ரூ.30 குறைவாக விற்கப்படுகிறது.
விலை உயர்வைக் கட்டுப் படுத்த, ஆன்லைன் வர்த்தகத்தில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கொள்முதல் செய்வதை மத்திய அரசு முதலில் தடுக்க வேண்டும். இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘சாம்பார் வச்சு கட்டுபடியாகல’
கொடுங்கையூரை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கூறும்போது, ‘‘கூட்டுறவு கடைகளில் பருப்பு வகைகள் ரூ.107-க்கு விற்கப் படுவதாக செய்திகள் வருகி ன்றன. அந்த கடைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை. ரேஷனில் ஒரு கிலோ பருப்பு ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. இது எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைப்பதில்லை. அதனால் வெளியில் ரூ.170 கொடுத்தே வாங்க வேண்டி உள்ளது. அரிசியை விலையில்லாமல் வாங்கிவிட்டு, பருப்பை ரூ.170-க்கு வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. இது கட்டுபடி ஆகாததால், பருப்பு சாம்பார் வைப்பதை குறைத்துக் கொண்டு, காரக்குழம்பு, தேங்காய் சட்னி, துவையல் என மாற்றி மாற்றி சமைக்கிறோம்’’ என்றார்.