

ஊராட்சி மன்ற உறுப்பினர் தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டி, பணி செய்யவிடாமல் தடுப்பதாக மேலக்கால் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் வீ.முருகேஸ்வரி. இவர், தனது கணவர் வீரபுத்திரனுடன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் மேலக்கால் ஊராட்சியில் தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். ஆகையால், நான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றாலே, என்னை சாதி பெயரைச் சொல்லியும், அசிங்கமான வார்த்தைகளாலும் ஊராட்சி உறுப்பினர்களான காசிலிங்கம், முனியம்மாளின் கணவர் பாண்டி, தமிழ்ச்செல்வியின் கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டுகின்றனர்.
மேலும், என்னை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவிடாமல் தடுக்கின்றனர். இதற்கு அரசு அதிகாரி சார்லஸ் உடந்தையாக செயல்படுகிறார்.
ஆகவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நான் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தலித் ஊராட்சித் தலைவர்கள் அவ்வப்போது முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில், கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.