

அதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள மண்டபத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த பணம் ரூ.51 ஆயிரம் செலவில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்துள்ளார்.
அதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ இயக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ குழுவின் அறிக்கையை கொண்டு விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார்.
நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரையும் வழங்கி வருகிறார். அவர் கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட உரிமை.
அதிமுகவை பொறுத்தவரை, நாங்கள் யாருடனும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. நாங்கள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம். எதிர்க்கட்சிகள் இதுவரை ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது போன்ற வேதனைகளை சொல்லிதான் வாக்கு கேட்க முடியும்.
இந்த முறையும் அதிமுக தொடர் வெற்றியை பெறும், என்றார்.